புதுடெல்லி: வரும் ஜனவரி மாதம் தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை தமிழக விவசாயிகளுடன் இணைந்து கொண்டாட பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் உள்ள ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டியின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பித்தார். இருப்பினும், இதுவரை தமிழக மண்ணில் நேரடியாக விவசாயிகளுடன் இணைந்து அவர் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடியதில்லை.
இந்நிலையில், வரலாற்றிலேயே முதல் முறையாக வரும் 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார். இது குறித்து பாஜக வட்டாரங்கள் கூறுகையில், ‘பிரதமர் மோடியின் இந்த வருகையானது கலாசார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்’ என்று தெரிவித்துள்ளன. இம்முறை தமிழக விவசாயிகளுடன் இணைந்து பிரதமர் பொங்கல் விழாவில் பங்கேற்கவுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேசுவரத்தில் நடைபெறவுள்ள ‘காசி தமிழ் சங்கமம் 4.0’ நிறைவு விழாவிலும், மாநில பாஜக தலைவரின் விழிப்புணர்வு பயணத்தின் இறுதி நிகழ்விலும் அவர் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளார். எதிர்வரும் 2026ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கிராமப்புற மக்களுடனான தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த பயணம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிரதமரின் வருகைக்கு முன்பாகவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாகவும், பிரதமரின் இந்த வருகையின் போது தமிழகத்தில் கூட்டணிக்கான இறுதி வடிவம் கொடுக்கப்படும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
