புராவிடன்ஸ்: அமெரிக்காவின் ரோட் தீவில் புகழ்பெற்ற பிரவுண் பல்கலைகழகம் உள்ளது. தனியார் பல்கலைகழகமான இதில்,10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பல்கலை கழகத்தின் இன்ஜினியரிங் மற்றும் இயற்பியல் பிரிவு கட்டிடத்திற்கு அருகே நேற்றுமுன்தினம் துப்பாக்கிசூடு நடந்தது. மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் 2 மாணவர்கள் பலியாகினர். சம்பவம் நடந்த போது பல்கலைகழகத்தில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று கொண்டிருந்தது.
அப்போது இந்த தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலையடுத்து மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வெளியே வரவேண்டாம் என்று பல்கலைகழக நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வந்தன. அதன் பின்னர், துப்பாக்கிசூட்டில் ஈடுபட்ட குற்றவாளியை போலீசார் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
