மெஸ்ஸி நிகழ்ச்சியில் களேபரம் கொல்கத்தா மைதானத்தில் விசாரணைக்குழு ஆய்வு: ஆளுநரும் பார்வையிட்டார்

கொல்கத்தா: அர்ஜென்டினாவை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இந்தியா வந்துள்ளார். நேற்று முன்தினம் கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸியை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தனர். ஆனால் மெஸ்ஸியை சுற்று விஐபிக்கள் கூட்டம் இருந்ததாலும் சிறிது நேரத்தில் மெஸ்ஸி மைதானத்தில் இருந்து புறப்பட்டு சென்றதாலும் ஆத்திரமடைந்த ரசிகர்கள் மைதானத்தை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவத்திற்காக கால்பந்து ரசிகர்களிடம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்டார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க கொல்கத்தா உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆஷிம் குமார் ரே தலைமையில் குழுவை முதல்வர் மம்தா அமைத்துள்ளார். அக்குழுவினர் சால்ட் லேக் மைதானத்திற்கு நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். அக்குழுவில் இடம் பெற்றுள்ள தலைமை செயலாளர் மனோஜ் பந்த், உள்துறை செயலாளர் நந்தினி சக்ரவர்த்தி ஆகியோருடன் ஆளுநர் ஆனந்த போசும் உடன் சென்றார். இக்குழு மைதான வளாகம், கூட்ட மேலாண்மை ஏற்பாடுகள் மற்றும் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்ட வசதிகள், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இந்த குழப்பத்திற்கான காரணங்களை கண்டறியும் இக்குழு, எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் தடுப்பதற்கான பரிந்துரைகளை அறிக்கையாக அரசுக்கு சமர்பிக்கும். இதற்கிடையே மெஸ்ஸி நிகழ்ச்சியின் தலைமை ஏற்பாட்டாளரான சதத்ரு தத்தா கைது செய்யப்பட்ட நிலையில், அவரை 14 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் மோடியுடன் மெஸ்ஸி இன்று சந்திப்பு
3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மெஸ்ஸி, பயணத்தின் நிறைவு நாளான இன்று டெல்லி வருகிறார். காலை 10.45 மணிக்கு டெல்லி வந்தடையும் அவர் ஓட்டலில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நடக்கும். அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி உ்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார். பின்னர் மாலையில் பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர் இந்திய பயணத்தை முடித்துக் கொள்கிறார்.

Related Stories: