மும்பை: மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் கிரிக்கெட், கால்பந்து ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், லியோனல் மெஸ்ஸி சந்திப்பை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். கால்பந்து விளையாட்டின் ஜாம்பவானான லியோனல் மெஸ்ஸி, ‘கோட் இந்தியா டூர் 2025’ என்ற பெயரில் தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்து உள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்க 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் அர்ஜென்டினா வீரர் ரோட்ரிகோ டி பால், உருகுவே வீரர் லூயிஸ் சுவாரஸ் ஆகியோரும் வந்துள்ளனர். நேற்று முன்தினம் கொல்கத்தா வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அவரது 70 அடி உருவச்சிலையை மெஸ்ஸி திறந்து வைத்தார். தொடர்ந்து, சால்ட் லேக் மைதானத்தில் நடந்த விழாவில் பங்கேற்ற மெஸ்ஸியை பார்க்க முடியாத ஆத்திரத்தில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால், அவசர அவசரமாக மெஸ்ஸி மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
பின்னர், ஐதராபாத் சென்ற அவர், அங்கு ராகுல் காந்தியை சந்தித்தார். தொடர்ந்து, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் விளையாடினார். நேற்று மும்பை சென்றனர். மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் திரை நட்சத்திரங்களுடன் சந்திக்கும் நிகழ்வும், இளம் கால்பந்து வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையிலான காட்சி போட்டி நடத்தப்பட்டது. மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், கால்பந்து விளையாட்டை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் மகாதேவ் திட்டத்தை விளக்கினார்.
இந்த மைதானத்திற்குள் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, ரோட்ரிகோ டி பால், லூயிஸ் சுவாரஸ் ஆகியோர் ஒன்றாக நுழைந்தனர். அப்போது, அரங்கமே அதிரும் வகையில் ரசிகர்கள், மெஸ்ஸி மெஸ்ஸி என கூச்சலிட்டு உற்சாகமடைந்தனர். மைதானத்தை சுற்றி வந்து, இளம் வீரர், வீராங்கனைகளுடன் மெஸ்ஸி விளையாடினார். மேலும், அரங்கம் அதிர ஒரு பெனால்டிக் கிக் அடித்து கோல் போட்டார். பிறகு ரசிகர்களை நோக்கி கால்பந்துகளை அடித்து விட்டார். அதனை எடுத்துக் கொண்ட ரசிகர்கள் உற்சாக ஆட்டம் போட்டனர். இந்திய நட்சத்திர கால்பந்து வீரர் சுனில் சேத்ரியை மெஸ்ஸி சந்தித்து பேசினார். அப்போதும் ரசிகர்கள் உற்சாகமாக ஆராவாரம் செய்தனர். நம்பர் 10 ஜெர்சியை சுனில் சேத்ரிக்கு மெஸ்ஸி பரிசளித்தார். பிறகு திரை நட்சத்திரங்களான அஜய்தேவ்கான், டைகர் ெஷராப், பிரீத்தி ஜிந்தா ஆகியோரும் மெஸ்ஸி உள்ளிட்ட 3 வீரர்களையும் சந்தித்து உரையாடினர்.
இறுதியாக, அனைவராலும் கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்படும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மேடைக்கு வந்தார். அவர் மைதானத்திற்குள் வந்த போது, வான்கடே ஸ்டேடியமே குலுங்கியது. லியோனல் மெஸ்ஸி, ரோட்ரிகோ டி பால், லூயிஸ் சுவாரஸ் ஆகியோருடன் சச்சின் உரையாடினார். கிரிக்கெட், கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான்கள் ஒரே மேடையில் நின்ற அக்காட்சியை பார்த்து, ரசிகர்கள் உற்சாக மிகுதியில் துள்ளிக்குதித்தனர். உலகின் தலை சிறந்த விளையாட்டு ஜாம்பவான்களை இங்கே பார்க்கிறோம் என்ற அறிவிப்பு வெளியிடவும், ரசிகர்களை நோக்கி இருவரும் கையசைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸிக்கு, தனது நம்பர் 10 ஜெர்சியை சச்சின் பரிசளித்தார். அப்போது மெஸ்ஸி, தான் கையெழுத்திட்ட கால்பந்தை, சச்சினுக்கு பரிசாக வழங்கினார். இந்த நட்சத்திர வீரர்கள் சந்திப்பால் மும்பை வான்கடே மைதானம் மகிழ்ச்சியில் திளைத்தது.
மெஸ்ஸி எல்லாவற்றிலும் சாதித்து விட்டார்-சச்சின்
ரசிகர்கள் முன்னிலையில் சச்சின் டெண்டுல்கர் பேசுகையில், ‘நான் இங்கு சில மறக்க முடியாத தருணங்களை கழித்திருக்கிறேன். நாம் சொல்வது போல், மும்பை ஒரு கனவுகளின் நகரம். பல கனவுகள் இந்த மைதானத்திலேயே நிறைவேறியுள்ளன. உங்கள் ஆதரவு இல்லாமல், 2011ல் இந்த மைதானத்தில் அந்த பொன்னான தருணங்களை (இந்தியா உலகக்கோப்பையை வென்றது) நாங்கள் கண்டிருக்கவே முடியாது. இன்றைக்கு கால்பந்து நட்சத்திரங்களான இம்மூவரும், இங்கு இருப்பது மும்பைக்கும், மும்பை மக்களுக்கும், இந்தியாவுக்கும் ஒரு பொன்னான தருணம். மூவரையும் வரவேற்ற விதம் சிறப்பாக இருந்தது. மெஸ்ஸியின் ஆட்டத்தைப் பற்றி பேச இது சரியான மேடை அல்ல. ஆனால், அவரை பற்றி என்ன பேசுவது?, அவர் எல்லாவற்றையும் சாதித்து விட்டார். அவருடைய அர்ப்பணிப்பு, உறுதி, ஈடுபாடு ஆகியவற்றை நாங்கள் போற்றுகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, அவருடைய பணிவு மற்றும் அவர் எப்படிப்பட்ட மனிதர் என்பதற்காக அவர் மிகவும் நேசிக்கப்படுகிறார். அனைத்து மும்பை மக்களின் சார்பாக, மெஸ்ஸிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நல்ல ஆரோக்கியம் கிடைக்க வாழ்த்துகிறேன். இங்கு வந்து எங்கள் இளம் வீரர்களை ஊக்குவித்ததற்கு, மீண்டும் ஒருமுறை நன்றி. நாம் அனைவரும் விரும்பும் உயரத்திற்கு, கால்பந்து விளையாட்டும் சென்றடையும் என்று நம்புகிறேன்,’ என்றார்.
