சென்னை விமான நிலையத்தில் இரண்டு மாதங்களில் ரூ.167 கோடி மதிப்புடைய 267 கிலோ தங்கம் கடத்திய யூடியூபர் கைது

* விமான நிலைய அதிகாரி உட்பட 3 பேர் வீடுகளில் சோதனை

* அண்ணாமலையின் நண்பருக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை

சென்னை: சென்னை விமான நிலையத்தில், இரண்டு மாதங்களில், ரூ.167 கோடி மதிப்புடைய, 267 கிலோ தங்கம் கடத்தலில், யூடியூபரும் பாஜ பிரமுகருமானவர் உட்பட 9 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் சமீபகாலமாக தங்கம் கடத்தும் செயல்கள் அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும், சென்னை சர்வதேச விமான நிலைய புறப்பாடு பகுதியில், பரிசுப் பொருட்கள், பொம்மை விற்பனை செய்யும் ஒரு கடையை (ஏர்ஹப்) மையமாக வைத்து, இந்தக் கடத்தல் நடப்பதாகவும் தகவல் கிடைத்தது.

இதையடுத்து சுங்கத்துறை தனிப்படை அதிகாரிகள் தங்கக் கடத்தல் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, சென்னையைச் சேர்ந்த யூடியூபர் சபீர் அலி என்பவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, இந்த பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை, சென்னை சர்வதேச விமான நிலையத்தில், பல லட்சம் முதலீடு செய்து, முறைப்படி இந்திய விமான நிலைய ஆணையத்தின் அனுமதியுடன் தொடங்கி நடத்தி வருகிறார் என்று தெரியவந்தது. அந்த கடையில் 7 பேரை பணிக்கு அமர்த்தியுள்ளார்.

அவர்கள் அனைவருக்கும், சென்னை விமான நிலையத்தில், அனைத்து பகுதிகளுக்கும் சென்று வருவதற்கான, சிறப்பு அனுமதியுடன் பி சி ஏ எஸ் பாஸ்கள் வாங்கி இருந்தார். மேலும், வெளிநாடுகளில் இருந்து டிரான்சிட் பயணிகள் சிலர், கடத்திக் கொண்டு வரும் தங்கத்தை, விமான நிலைய பாதுகாப்பு பகுதியில் உள்ள கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு, சபீர் அலிக்கு தகவல் தெரிவித்து விட்டு சென்று விடுவார்கள்.

அப்போது சபீர் அலி, தனது கடையில் உள்ள ஊழியர்களை அனுப்பி, அந்த தங்கத்தை ஊழியர்களின் உள்ளாடைக்குள் அல்லது உடலின் பின் பகுதிக்குள் மறுத்து வைத்து, வெளியில் கொண்டு வந்து, கடத்தல் கும்பலிடம் கொடுத்து அனுப்பி விடுவார்கள். இவ்வாறாக கடந்த இரண்டு மாதங்களாக இந்த கடத்தல் தொழில், சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து நடந்துள்ளது தெரியவந்தது. மேலும், சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நடத்திய விசாரணையில், சபீர் அலி, விமானநிலையத்துக்குள் கடை வைக்க ரூ.77 லட்சத்தை ஹவாலா மூலமாக பெற்று, பணத்தைக் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்தப் பணத்தை இலங்கையைச் சேர்ந்த தங்கக் கடத்தல் கும்பல் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்தநிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு, துபாயில் இருந்து விமானத்தில் டிரான்சிட் பயணியாக, சென்னைக்கு வந்துவிட்டு, சென்னையில் இருந்து மற்றொரு விமானத்தில், இலங்கை செல்ல இருந்த, இலங்கையைச் சேர்ந்த சுமார் 30 வயதுள்ள ஆண் பயணி ஒருவர் மீது, சுங்கத்துறையின், ஏர் இன்டலிஜென்ட்டுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர்.

அதோடு அவர் விமான நிலைய பாதுகாப்பு பகுதியின் கழிவறைக்கு சென்று விட்டு வெளியில் வந்ததால், அந்த கழிவறையில் சோதனை இட்டபோது, அங்குள்ள தண்ணீர் தொட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பார்சல்களில், ஒரு கோடி மதிப்புடைய 1.6 கிலோ தங்கத்தை சுங்கத்துறை கைப்பற்றினர். இதையடுத்து சுங்க அதிகாரிகள், இலங்கை பயணியை கையும் களவுமாக பிடித்து, விசாரணை நடத்தினர். அப்போது இது பற்றிய முழு தகவல்கள் வெளிவந்தன.

இதையடுத்து சுங்க அதிகாரிகள் இலங்கை கடத்தல் பயணி, சென்னை விமான நிலையத்தில் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வரும் சபீர் அலி, அவர் கடையில் பணியாற்றும் 7 ஊழியர்கள் ஆகிய 9 பேரை கைது செய்து, விசாரணை நடத்தினர். அப்போது, யூடியூபர் சபீர் அலி, சென்னை சர்வதேச விமான நிலையத்தில், இந்த பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை தொடங்குவதற்கு, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் எப்படி அனுமதி பெற்றார் என்ற சந்தேகம் ஏற்பட்டது.

அது குறித்து தீவிரமாக விசாரித்தபோது, சென்னை விமான நிலையத்தில், கமர்சியல் பிரிவில், இணை பொது மேலாளர் பொறுப்பில் உள்ள, உயர் அதிகாரி ஒருவர், சபீர் அலிக்கு உதவி செய்துள்ளது தெரிய வந்தது. மேலும் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் இருந்து, இதைப் போன்ற கடைகள் நடத்துவதற்கான ஒட்டுமொத்த உரிமத்தை, தனியார் நிறுவனம் ஒன்றுக்கு கொடுத்துள்ளது. அந்த தனியார் நிறுவனத்தின் பணியாளர் பிரித்வீ என்பவர்தான், விமானநிலைய ஆணைய இணை அதிகாரிக்கு பரிந்துரை செய்துள்ளார்.

பிரித்வீ பரிந்துரை செய்துள்ள மேலும் 2 கடையின் ஊழியர்களும் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ளனர் என்றும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சபீர் அலியின் பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பணியாற்றிய 7 பணியாளர்களுக்கும், சென்னை விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வருவதற்கான பி சி ஏ எஸ் பாஸ், முறையான விசாரணை, காவல்துறையின் தடையில்லா சான்று போன்றவைகள் பெற்று வழங்கப்பட்டுள்ளதா என்றும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சபீர் அலி இந்த பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்குவதற்கு உறுதுணையாக இருந்ததாக கூறப்படும், சென்னை விமான நிலைய இணை பொது மேலாளர் பொறுப்பில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் வீட்டிலும் சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும், அதோடு அவருடைய காஞ்சிபுரம் வீட்டிலும், சோதனை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், கடைகளை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்துள்ள, அந்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இருவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அதோடு கடந்த இரண்டு மாதங்களில் சென்னை விமான நிலையத்தில், இந்த கும்பல் மூலம் கடத்தப்பட்ட ரூ.167 கோடி மதிப்புடைய 267 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்வது குறித்தும், சுங்கத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இது சம்பந்தமாக கடந்த மூன்று மாதங்களில் சென்னை விமான நிலைய அனைத்து பகுதிகள், விமானங்களின் உள்பகுதிகளில் பதிவாகியுள்ள சிசிடிவி கேமரா காட்சிகள், செல்போன் டவர் உரையாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுடன் ஆய்வு பணி நடந்து வருகிறது.

மேலும், தற்போது கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சபீர் அலி, இலங்கை பயணி உள்ளிட்ட 9 பேர்களையும், நீதிமன்ற அனுமதியுடன், காவலில் எடுத்து விசாரணை நடத்துவது குறித்தும், அதோடு சபீர் அலி, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த கடையை தொடங்குவதற்கு முன்பு, என்ன செய்து கொண்டு இருந்தார், அவருடைய பின்னணி என்ன, அவருக்கு யார் யாருடன் தொடர்பு உள்ளது என்றெல்லாம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில், சபீர் அலிக்கு பரிந்துரை செய்த தனியார் நிறுவன ஊழியர் பிரித்வீ, தமிழக பாஜவில் மாணவர் அணியில் பதவியில் இருந்து வந்துள்ளார். பிரித்வீயின் டிவிட்டர் கணக்கை பிரதமர் மோடியே பின் தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு ஒன்றிய அமைச்சரிடம் பிரித்வீ பணியாற்றி வந்துள்ளார். தமிழக பாஜ மாநில தலைவர்கள் சிலரது பெயரைச் சொல்லித்தான் பண வசூலில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் பல முக்கியத் தலைவர்களுடனும் பிரித்வீ நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

சுங்கத்துறை விசாரணையில் பிரித்வீ மாட்டியுள்ள தகவல் தெரியவந்ததும், அவர் பணியாற்றும் நிறுவனத்தில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். அதேநேரத்தில் கடந்த 15ம் தேதி அண்ணாமலைக்கும், அவருடைய வார் ரூம் ஆட்களுக்கும் தங்கக் கடத்தல் மற்றும் மணல் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதாக பாஜ சிந்தனையாளர் பிரிவு மாநில பார்வையாளர் கல்யாணராமன் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து அவரை கட்சியில் இருந்து அண்ணாமலை நீக்கிவிட்டார். இந்த விவகாரங்கள் தற்போது பாஜவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தங்க கடத்தல் கும்பலில் சிக்கியுள்ள ஒருவர், அண்ணாமலையுடன் நெருக்கமாக இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சென்னை விமான நிலையத்தில் இரண்டு மாதங்களில் ரூ.167 கோடி மதிப்புடைய 267 கிலோ தங்கம் கடத்திய யூடியூபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: