வீட்டில் கஞ்சா பதுக்கிய மகனை போலீசாரிடம் சிக்க வைத்த தாய்: ரூ.2 லட்சம் கஞ்சா ஆயில் பறிமுதல்

பெரம்பூர்: வியாசர்பாடியில் வீட்டில் கஞ்சா ஆயில் பதுக்கிய மகனை தாய் போலீசாரிடம் சிக்க வைத்தார். அவரிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான 630 மி.லி., கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டது. வியாசர்பாடி பி.வி.காலனி 5வது தெருவை சேர்ந்தவர் ராம் (21). டிரைவராக வேலை செய்து வருகிறார். நேற்று காலை இவரது தாய் பாக்கியலட்சுமி, தொலைபேசி மூலம் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு, தனது மகன் ஏதோ ஒரு போதைப் பொருளை கொண்டு வந்து வைத்துள்ளார். அதை சாப்பிட்டவுடன் அவரது நடவடிக்கைகள் சரி இல்லை எனக் கூறியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த எம்.கே.பி நகர் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார், ஸ்ரீராமின் வீட்டிற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வீட்டின் உள் அறையில் 630 மி.லி., கஞ்சா ஆயில் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. அதனைத்தொடர்ந்து, ஸ்ரீராமை, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். ஆக்டிங் டிரைவராக வேலை செய்து வந்த ஸ்ரீராம், கடந்த 25ம் தேதி ஒடிசா சென்று திரும்பி வரும்போது, ஆந்திர மாநிலம் அனக்கப்பள்ளி என்ற இடத்தில் 300 மி.லி., அளவுள்ள இரண்டு பாட்டில் கஞ்சா ஆயில் வாங்கி வந்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த அருண் என்பவர் இதனை வாங்கி வரக் கூறி உள்ளார்.

அதன் பிறகு மாதவரம் ரவுண்டான பகுதியில் வைத்து அதனை வேறு ஒருவருக்கு கைமாற்றி உள்ளார். ஸ்ரீராம் கொடுத்த தகவலின் பேரில் வியாசர்பாடி எம்.கே.பி நகர் 14வது தெருவைச் சேர்ந்த பர்வேஷ் (23) என்பவரையும் கைது செய்து விசாரித்தனர். அதில், ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த செக்யூரிட்டி சதீஷ் என்பவரிடம், பர்வேஷ் காய்கறி லோடு வண்டி ஓட்டி வருவதும், சமீபத்தில் செக்யூரிட்டி சதீஷ் ஓட்டேரி போலீசாரல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதும் தெரியவந்தது.

கேரளாவைச் சேர்ந்த அருண் என்பவரின் தம்பி தான் செக்யூரிட்டி சதீஷ் என்பதும், இவர்கள் இருவரும் டிரைவர்களான பர்வேஷ் மற்றும் ஸ்ரீராம் ஆகிய இருவரையும் வட மாநிலங்களுக்கு செல்லும் போது கஞ்சாவை வாங்கி வர சொல்வதும் அதனை இவர்களை வைத்தே கைமாற்றி விடுவதும் தெரிய வந்தது. தற்போது ஸ்ரீராம் வீட்டில் இருந்து எடுக்கப்பட்டுள்ள 630 கிராம் கஞ்சா ஆயிலை கேரளாவைச் சேர்ந்த அருண் கொடுத்து வைத்துள்ளதும் கூடிய விரைவில் அதனை வேறு ஒருவருக்கு கைமாற்ற இருந்த நிலையில் அதனை ஸ்ரீராம் லேசாக எடுத்து சாப்பிட்டு விட்டு போதையில் வீட்டில் கலாட்டா செய்ததால் அவரது தாய் பார்த்து போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஸ்ரீராம் மற்றும் பர்வேஸ் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கேரளாவை சேர்ந்த அருண் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர் .

The post வீட்டில் கஞ்சா பதுக்கிய மகனை போலீசாரிடம் சிக்க வைத்த தாய்: ரூ.2 லட்சம் கஞ்சா ஆயில் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: