சுற்றுலா பயணிகள் வசதிக்காக ரூ.3 கோடியில் 5 புதிய அதிநவீன சொகுசு சுற்றுலா பேருந்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு-ஒகேனக்கல், மைசூர்-பெங்களூரு, குற்றாலம், நவக்கிரக கோயில்கள் தொகுப்பு மற்றும் மூணார் என 3 நாட்கள் செல்லும் சுற்றுலா பயண திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

சென்னை-மாமல்லபுரம், காஞ்சிபுரம்- மாமல்லபுரம், திருப்பதி, திருவண்ணாமலை, புரம் தங்க கோயில், புதுச்சேரி என ஒரு நாள் சுற்றுலா பயண திட்டங்கள். 8 நாட்கள் பயணம் செய்யும் தமிழ்நாடு சுற்றுலா, கோவா-மந்த்ராலயம் சுற்றுலா பயண திட்டங்கள். 14 நாட்கள் பயணம் செய்யும் தென்னிந்திய சுற்றுலா பயண திட்டங்கள் மற்றும் யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பழமையான பண்பாட்டு சின்னங்களை பார்வையிடும் சுற்றுலா பயண திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுலா பயண திட்டங்கள் பொதுமக்களின் வசதிக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சுற்றுலா பயண திட்டங்களை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் குளிர்சாதன வசதியுடன் கூடிய வால்வோ சொகுசு பேருந்துகள், அதிநவீன சொகுசு பேருந்துகள், சாதாரண சொகுசு பேருந்துகள், 18 இருக்கைகளுடன் கூடிய சிறிய ரக சொகுசு பேருந்துகள் என மொத்தம் 15 சொகுசு பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்த சுற்றுலா பேருந்துகள் மூலமாக 2021 மே 7ம்தேதி முதல் கடந்த மே 31ம்தேதி வரை 3,03,721 பேர் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயண திட்டங்களை மேற்கொள்ளும் வகையில், சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக ₹3 கோடி மதிப்பிலான 35 இருக்கைகள் கொண்ட 4 பேருந்துகள் மற்றும் 18 இருக்கைகள் கொண்ட ஒரு பேருந்து என 5 புதிய அதிநவீன சொகுசு சுற்றுலா பேருந்துகளை தலைமை செயலகத்தில் நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேருந்துகளில் நீண்ட தூரம் மற்றும் நீண்ட நாட்கள் சுற்றுலா பயணம் மேற்கொள்ள குளிர்சாதன வசதி, மிதவை அமைப்பு வசதி, வாகனத்தின் இருப்பிடத்தை அறிய ஜிபிஎஸ் கருவி, வைபை வசதி, ஒவ்வொரு இருக்கையிலும் போன் சார்ஜ் செய்யும் வசதி, 35 பயணிகளும் நீண்ட நாள் பயணத்திற்கான தங்கள் பொருட்களை தாராளமாக வைத்துக் கொள்ள மிகப்பெரிய அளவிலான பொருட்கள் வைப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கா.ராமச்சந்திரன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் மணிவாசன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சமயமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சுற்றுலா பயணிகள் வசதிக்காக ரூ.3 கோடியில் 5 புதிய அதிநவீன சொகுசு சுற்றுலா பேருந்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: