வலங்கைமான் அருகே கீழ அமராவதி பகுதியில் திருமண வரம் வேண்டி சுமை தாங்கி கல்

*2 ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்டது சேதமானதால் பரபரப்பு

வலங்கைமான் : வலங்கைமான் அடுத்த கீழ அமராவதி பகுதியில் திருமண வரம் வேண்டி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக சுமைதாங்கி கல் ஒருவரால் அமைக்கப்பட்ட நிலையில். தற்போது திருமண தடைக்கு சுமைதாங்கி கல் தான் காரணம் என மற்றொருவரால் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கருவுற்ற பெண் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் எதிர்பாரதவிதமாக இறந்துவிட்டால் அவளுக்காக பொது இடங்களில் சுமைதாங்கி அமைப்பது பழங்காலத்தில் வழக்கமாக இருந்தது. பிறர் சுமைத் துன்பத்தைப் போக்குவதன் மூலம் அவளுக்கு வயிற்றுச் சுமையாலான துன்பம் இதனால் நீங்கும் என்பது நம்பிக்கை. சுமைதாங்கி கல் என்பது பண்டைய தமிழர்களின் பாரம்பரிய பண்பாடுகளில் ஒன்றாகும்.

சுமைகளை சுமந்து செல்வோர் அதனை பிறர் துணையின்றி எளிதாக இறக்கி மீண்டும் தூக்கி கொள்வதற்காக கட்டப்பட்ட அமைப்பு. முந்தைய காலங்களில் பொருள்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல வசதி படைத்தவர்கள் மட்டும் மாடு, கழுதை, குதிரை போன்ற விலங்குகளின் துணையோடு வாகனங்களை பயன்படுத்தினர். மற்றவர்கள் தோளிலும், தலையிலும் சுமைகளுடன் சுமந்து சென்றனர்.

சுமையுடன் சென்றவர்களுக்கு உதவிடும் வகையில் அன்றைய ஆட்சியாளர்களும், தொண்டாற்ற நினைத்தவர்களும் நீர்நிலைகள் உள்ள சாலையோர மரத்தடிகளில் சுமைதாங்கி கற்களை நட்டு மகிழ்ந்தனர். சுமையுடன் செல்லும் பயணியின் சிரமத்தை போக்க சுமைதாங்கி கற்களை அமைத்துக் கொடுத்தனர். தன்னை அடையாளப்படுத்த அக்கற்களில் பெயர்களை பதித்து வைத்தனர். இன்றளவும் பலர் இக்கற்களுக்கு வழிபாடு செய்கின்றனர்.

பெரும்பாலான மக்கள் பொருட்களைத் தலைச்சுமையாகவே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. உற்பத்தி பொருட்களை தொலைவிலுள்ள சந்தைகளுக்கு எடுத்துச் செல்வோரும், சந்தைகளில் வாங்கிய பொருட்களை வீடுகளுக்கு எடுத்துச் செல்வோரும் எனப் பல வகையானோர் நெடுந்தூரம் சுமைகளைச் சுமந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. தொலைதூரப் பயணம், யாத்திரை செல்பவர்களும், வேண்டிய பொருட்களைக் கால்நடையாகவே சுமந்து செல்வதுண்டு.

சிறிது இளைப்பாறுவதற்காகச் சுமைகளை இறக்கி வைக்கவும், பின்னர் திரும்பவும் தூக்கவும் பிறர் துணை தேவைப்படும். இத் துணை எல்லா நேரங்களிலும் கிடைக்கும் என்பதில்லை. இவ்வாறான பிரச்சனையின்றித் தனியாகவே சுமைகளை இறக்கவும், திரும்ப அதிக எத்தனம் இன்றித் தூக்கியேற்றவும் வசதியாக உயரமான மேடை போல் அமைக்கப்படும் அமைப்பே சுமைதாங்கியாகும். வசதிகள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில், சுமைதாங்கிகள் தேவையற்றவை ஆகிவிட்டன.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த திருவோணமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ அமராவதி பகுதியில் ஆலங்குடி கிராமத்தை பூர்வீகமாக கொண்டு வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியர், தனது மகனின் திருமணம் தடைப்பட்டு இருப்பதாகவும், அத் தடை நீங்கும் வகையில் சுமைதாங்கி கல் அமைப்பதாக கூறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சுமைதாங்கி கல் அமைத்துள்ளார்.

இந்நிலையில் சுமைதாங்கி கல்லை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். முன்னதாக அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவர் உங்களுக்கு திருமண தடை ஏற்பட்டதற்கு உங்கள் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சுமைதாங்கி கல் தான் காரணம் என சிலர் கூறியதாக கூறப்படுகிறது.ஆகையால் தமக்குத் திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காகவும், தமக்கு திருமணத்திற்கு தடையாக இந்த கல் இருப்பதாக கருதி சேதப்படுத்தி இருக்கலாம் என கருதப்படுகிறது.

The post வலங்கைமான் அருகே கீழ அமராவதி பகுதியில் திருமண வரம் வேண்டி சுமை தாங்கி கல் appeared first on Dinakaran.

Related Stories: