டாக்டர் காந்திமதிநாதனை இன்று இல்லத்திற்கே அழைத்து நேரில் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மதுரை தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனையில் நோயாளிகளை உறவினர்கள் போல் நேசித்து மருத்துவமனைக்கும், மருத்துவப் பணிகளுக்கும் பெருமைகள் தேடித்தந்து ஓய்வுபெற்றுள்ள
டாக்டர் காந்திமதிநாதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இல்லத்திற்கே அழைத்து நேரில் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தார். மதுரை அருகே தோப்பூரில் 1960-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி அன்றைய முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் அரசு காசநோய் மற்றும் பிற தொற்று நோய்களுக்காக தனித்தன்மை வாய்ந்த நெஞ்சக நோய் மருத்துவமனை திறக்கப்பட்டது. 115 ஏக்கரில் பரந்து விரிந்த நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையில் காசநோயாளிகள் பிற தொற்று நோயாளிகள் நோய் முற்றிய நிலையில் வீட்டில் வைத்து பராமரிக்க முடியாத நிலையில் உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள் இந்த மருத்துவமனையில் கொண்டு வந்து விடப்படுவார்கள்.

2013-ஆம் ஆண்டின் இந்த மருத்துவமனையின் நிர்வாக அலுவலராக நியமிக்கப்பட்டவர் டாக்டர் காந்திமதிநாதன் அவர்கள். டாக்டர் காந்திமதி நாதன் அவர்களின் தன்னலமற்ற தியாக மனப்பான்மையுடன் கூடிய மருத்துவத் தொண்டுகளால் இந்த மருத்துவமனை மிகச்சிறந்த மருத்துவமனையாக வளர்ந்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கே இங்கு நிர்வாக அலுவலகம் அமையும் அளவுக்கு இந்த மருத்துவமனை உயர்ந்து சிறந்துள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் நந்தவனம் போல் திரும்பிய பக்கம் எல்லாம் பசுமை புல்வெளிகள் சூரிய வெளிச்சமே படாத அளவுக்கு அடர்த்தியாக நிழல்தரும் மரங்கள் நிறைந்துள்ளன.

மருத்தவர் காந்திமதிநாதன் அவர்களின் கடுமையான உழைப்பின் மூலம் இந்த மருத்துவமனையில் இன்வெர்ட்டர்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், எப்.எம். ரேடியோ வசதி, நூலகம், பொழுதுபோக்கும் இடம், சதுரங்கம், கேரம் பலகை, இறகுப்பந்து விளையாட்டு அரங்கம், பொழுதுபோக்குவதற்கு டி.வி., நடைபயிற்சி பூங்கா, தியான மையம், யோகா அறை போன்றவை அமைந்து நீண்டகாலம் தங்கி காசநோய் கிசிச்கைக்காக மருத்துவம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளவர்கள் அனைவரும் கவலையின்றி மருத்துவம் செய்துகொள்வதற்குத் தேவையான வசதிகள்அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.

டாக்டர் காந்திமதிநாதன் அவர்களின் தீவிர கவனத்தின் விளைவாக இம்மருத்துவமனையில் சொற்பொழிவாளர்கள், மனோதத்துவ நிபுணர்கள் அழைத்துவரப்பட்டு நோயாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. சிகிச்சைபெறும் ஒவ்வொரு நோயாளியின் பெயரையும் சொல்லி அழைக்கும் அளவுக்கு டாக்டர் காந்திமதிநாதன் நோயாளிகளின் மீது சிறப்பான கவனம் செலுத்தி வந்துள்ளார். டாக்டர் காந்திமதிநாதன் அவர்கள் இந்த மருத்துவமனையை தனது வீடு போலவும், நோயாளிகளை தங்கள் குடும்ப உறுப்பினர்கள் போலவும் நேசித்து பயனாளிகளின் நோய் விரைந்து குணமடைய காரணமாக இருந்துள்ளார். இந்த தோப்பூர் காசநோய் மருத்துவமனை டாக்டர் காந்திமதிநாதன் அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணிகளால் தற்போது அதிநவீன மருத்துவ வசதிகளுடன் தமிழகத்தின் தலைசிறந்த நெஞ்சக மருத்துவமனையாக உருவெடுத்து ஒருசோலை வனமாக காட்சியளிக்கிறது. தோப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனைத்து வகையிலும் பெருமைகளை உருவாக்கித் தந்துள்ள டாக்டர் காந்திமதிநாதன் 30.6.2024 அன்று அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டாக்டர் காந்திமதிநாதன் அவர்களின் தியாகத் திருத்தொண்டுகளால் தோப்பூர் காசநோய் மருத்துவமனை சிறந்து விளங்குவது அறிந்து பெரிதும் மகிழ்ந்து டாக்டர் காந்திமதிநாதன் அவர்களுக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் இல்லத்திற்கு டாக்டர் காந்திமதிநாதன் அவர்கள் தமது குடும்பத்தாருடன் வருகை தந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை இன்று (1.7.2024) நேரில் சந்தித்தார். முதலமைச்சர் மிகுந்த மகிழ்ச்சியோடு டாக்டர் காந்திமதிநாதன் அவர்களை வரவேற்று, தோப்பூர் காசநோய் மருத்துவமனையில் பணியாற்றியுள்ள காலத்தில் நோயாளிகளை நேசித்து ஆற்றியுள்ள மனிதநேயம் சிறக்கும் மகத்தான தொண்டுகளைப் போற்றி, பாராட்டி, வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். இன்று உலக மருத்துவர் தினம் கடைப்பிடிக்கப்படுவதால் மருத்துவத் துறையில் சிறந்த தொண்டுகள் புரிந்துள்ள மருத்துவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழாவில் டாக்டர் காந்திமதி நாதன் அவர்களும் விருது வழங்கிச் சிறப்பிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post டாக்டர் காந்திமதிநாதனை இன்று இல்லத்திற்கே அழைத்து நேரில் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: