புதுகையில் 13.75 கிலோ நகை மாயமான வழக்கு; பஞ்சாப் நேஷனல் வங்கியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை தெற்கு ராஜ வீதியில் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளது. இந்த வங்கியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்த திருக்கட்டளையை சேர்ந்த மாரிமுத்து கடந்த 2019 மே மாதம் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது மனைவி ராணி புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசில் புகார் அளித்திருந்தார். மாரிமுத்து மாயமான ஒரு சில தினங்களில் திருவரங்குளம் அருகே வல்லநாடு காட்டுப்பகுதியில் மாரிமுத்துவின் கார் எரிந்த நிலையிலும், அதில் எரிந்த நிலையில் கவரிங் நகைகள் மற்றும் ஹார்ட் டிஸ்க் கண்டெடுக்கப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் வங்கியில் உள்ள நகைகளை மாரிமுத்து எடுத்து சென்றிருக்கலாம் என்ற எண்ணத்தில் வங்கியில் சோதனை செய்த போது வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 13.75 கிலோ தங்க நகைகள் காணாமல் போயிருந்ததும், அதே நேரத்தில் வங்கியில் சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவாக பொருத்தப்பட்டிருந்த ஹார்ட் டிஸ்க் மாயமானதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அலுவலக உதவியாளராக பணிபுரிந்த மாரிமுத்து தான் நகைகளை எடுத்துச் சென்று இருப்பார் என்ற சந்தேகத்தில் அப்போது வங்கியில் பணிபுரிந்த அதிகாரிகள் புதுக்கோட்டை நகர போலீசில் புகார் அளித்திருந்தனர்.இதற்கிடையே மாரிமுத்து புதுக்கோட்டை மாவட்டம் கோடியக்கரை கடற்கரை பகுதியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மேலும் பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது.இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வங்கியில் மாயமான வாடிக்கையாளர்கள் நகைகளை வங்கி நிர்வாகம் காப்பீடு மூலம் வழங்கியது. மேலும் நகைகள் மாயமான போது அந்த வங்கியில் பணிபுரிந்த வங்கி மேலாளர் உள்ளிட்ட சிலரை வங்கி நிர்வாகம் பணியிட மாற்றமும் செய்தது.போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும் இந்த வழக்கில் எந்த துப்பும் கிடைக்காததால் வழக்கை சிபிஐக்கு மாற்ற புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை பரிந்துரை செய்தது.

பின்னர் இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி மதுரையைச் சேர்ந்த சிபிஐ அதிகாரிகள் 5க்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை தெற்கு ராஜ வீதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் தங்களது முதற் கட்ட விசாரணையை தொடங்கினர்.வங்கி நகைகள் மாயமானது எப்படி, வங்கி நகைகளை மாரிமுத்து தான் எடுத்து சென்றார் என்றால் அவரது கார் திருவரங்குளம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் கிடந்தது எப்படி, மாரிமுத்துவை கொலை செய்தவர்கள் யார், மாரிமுத்துவுக்கு உதவி செய்தது யார் என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தனர். இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு மதுரையிலிருந்து எஸ்பி கணேசன் தலைமையில் 17 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் 6 கார்களில் புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு வந்து அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதுகையில் 13.75 கிலோ நகை மாயமான வழக்கு; பஞ்சாப் நேஷனல் வங்கியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: