நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் வீடு பெறுபவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம்: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில் வீடு பெறுவோருக்கு ஆதார் எண் கட்டாயம் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: குடிசை பகுதியில் வாழ்பவர்களுக்கும், வீடு இல்லாதவர்களுக்கும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீட்டு வசதிகள் செய்து தரப்படுகின்றன.

எனவே, ஆதார் சட்டப்படி வீடு பெற விண்ணப்பிக்கும் பயனாளிகள் ஆதார் எண்ணை வைத்திருக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகாரத்துக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் நலத் திட்டங்களுக்காக பயனாளிகள் விண்ணப்பிக்கும் முன் ஆதார் எண்ணை பெற வேண்டும். இதற்கு அருகில் உள்ள ஆதார் மையத்தை நாடலாம். அல்லது திட்டத்தை செயல்படுத்தும் துறைகளே, பயனாளிகளுக்கு ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகளை செய்து தரலாம்.

ஆதார் எண் கிடைக்கும்வரை, அடையாள சான்று அல்லது புகைப்படத்துடன் கூடிய வங்கிப் புத்தகம், பான் அட்டை, கடவுச்சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்ட அட்டை, கிசான் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட சான்றுகளில் ஏதேனும் ஒன்றை சான்றாக அளிக்கலாம்.

மேலும், ஆதார் அங்கீகாரம் பெறும்போது, விரல் ரேகை பதிவில் சிக்கல் ஏற்பட்டால், முகத்தை ஸ்கேன் செய்வதன் மூலம் அங்கீகாரம் பெறலாம். அதேபோல் ஒருமுறை கடவுச்சொல் மூலமும் அங்கீகாரம் பெறலாம். அதுவும் சாத்தியப்படாவிட்டால், ஆதார் அட்டையில் உள்ள க்யூஆர் கோடு மூலம் உறுதி செய்யலாம். எனவே, இனி வீடு பெற விண்ணப்பிக்கும் பயனாளிகள் கட்டாயம் ஆதார் எண் வைத்திருக்க உத்தரவிடப்படுகிறது.

The post நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் வீடு பெறுபவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம்: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: