கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள், பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் தகவல்

சென்னை: கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறிஸ்தவ அனாதை இல்லங்கள்,

தொழுநோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் போன்றோர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. நலவாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம், 6 வதுதளம், சிங்காரவேலர் மாளிகை, மாவட்ட ஆட்சியரகம், ராஜாஜி சாலை, சென்னை-1ல் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட ரோமன் கத்தோலிக் திருச்சபை அதன் பேராயர்கள் மற்றும் ஆயர்கள், புராட்டஸ்டாண்ட் திருச்சபைகள் ஆயர்கள், சினாட்ஆப்பெண்டகோஸ்டல் சர்ச்சஸ் போன்ற அங்கீகாரம் செய்யப்பட்ட திருச்சபைகளிடமிருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். இந்த திருச்சபைகளின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட சிறுபான்மையின நல அலுவலரால் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

மேலும் வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புதுறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்களில் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் போன்றே வழங்கப்படும். 10ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ பாலிடெக்னிக் படிப்பு, தொழிற் கல்வி பட்டப்படிப்பு வரை கல்வி உதவித் தொகை,

திருமண உதவித்தொகை ஆண்களுக்கு ரூ.3,000 மற்றும் பெண்களுக்கு ரூ. 5,000. மகப்பேறு உதவித்தொகை ரூ.6,000 மற்றும் கருச்சிதைவு, கருக்கலைப்பு உதவித்தொகை ரூ.3,000, கண்கண்ணாடி உதவித்தொகை ரூ.500, முதியோர் ஒய்வூதியம் (மாதந்தோறும்) ரூ.1,000, விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை ரூ.1,00,000, விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகை ரூ.10,000 முதல் ரூ.1,00,000, இயற்கை மரணம் உதவித்தொகை ரூ.20,000, ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.5,000.

மேலும், விவரங்களை அறிந்து கொள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 6வது தளத்தில் இயங்கும் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பங்களை பெற்று பூர்த்திசெய்து உரிய ஆவணங்களுடன் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள், பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: