மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக உள்நாட்டு தொழில்முனைவோர்களை அடையாளம் காட்டுகிறார் பிரதமர்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் அகில இந்திய வானொலி வாயிலாக நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். அந்த வகையில், மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் மோடியின் 111-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சென்னை திருவல்லிக்கேணியில் பொது மக்கள் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜ மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து எல்.முருகன் அளித்த பேட்டி: பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக சமூக சேவகர்களை பெருமிதப்படுத்துகிறார். உள்நாட்டு கலாசாரத்தை ஊக்குவித்து, தொழில்முனைவோர்களை அடையாளம் காட்டுகிறார்.

ஒசூரில் சர்வதேச விமானநிலையம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள். அருகாமையில், பெங்களூருவில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. அதனால், இந்த அறிவிப்பு சாத்தியமா என்பதை ஒன்றிய அரசு ஆய்வு செய்யும். முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்கா பயணத்தின் போது, முதல்வர் சந்திக்கும் நிறுவனங்கள், முதலீடுகள் குறித்த விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தமிழக அரசு கள்ளக்குறிச்சி விஷசாராய விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும். அப்போதுதான் முழு உண்மைகள் வெளிவரும். இவ்வாறு அவர் கூறினார்.

The post மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக உள்நாட்டு தொழில்முனைவோர்களை அடையாளம் காட்டுகிறார் பிரதமர்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: