வரத்து அதிகரிப்பால் மீன் விலை ரூ.100 முதல் ரூ.300 வரை குறைந்தது

சென்னை: தமிழகத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மீன் பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இக்காலத்தில் கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் என்பதால் இந்த தடை விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் மீன்பிடி தடைகாலம் முடிந்ததை அடுத்து கடந்த 15ம் தேதி முதல் மீனவர்கள் விசைப்படகுகளில் மீண்டும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லத் தொடங்கினர்.

மறுநாள் 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒரு சில படகுகள் மட்டுமே கரை திரும்பின. அதனால், மீன்விலை குறையவில்லை. தடைக்காலத்தில் விற்கப்பட்ட விலையை போலவே மீன்கள் விற்பனையானது. தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமையன்றும் பெரிய வகை மீன்கள் கிடைக்கும் என்றும் எதிர்பார்த்த நிலையில் சிறிய வகை மீன்களே அதிக அளவில் வந்தது. இதனால், அப்போதும் மீன் விலை குறையவில்லை. நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னை காசிமேட்டில் கடந்த வாரத்தை விட மீன் விலையும் குறைந்திருந்தது.

அதாவது கடந்த வாரத்தை விட ரூ.100 முதல் ரூ.300 வரை மீன் விலை குறைவாக இருந்ததை பார்க்க முடிந்தது. கடந்த வாரம் ரூ.1300க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் ரூ.1000, ரூ.900க்கு விற்பனையானது. கருப்பு வவ்வால் ரூ.1000லிருந்து ரூ.700, கொடுவா ரூ.650லிருந்து ரூ.500, சங்கரா ரூ.450லிருந்து ரூ.350, நண்டு, இறால் ரூ.450லிருந்து ரூ.350, கடம்பா ரூ.350லிருந்து ரூ.300 என்றும் விற்கப்பட்டது. மேலும் ஷீலா ரூ.250, பெரிய இறால் ரூ.400 என்ற அளவிலும் விற்பனையானது. இதே போல நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன்மார்க்கெட், பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளில் மீன் விற்பனை படுஜோராக நடந்தது.

The post வரத்து அதிகரிப்பால் மீன் விலை ரூ.100 முதல் ரூ.300 வரை குறைந்தது appeared first on Dinakaran.

Related Stories: