வாட்டர் பில்டர் சர்வீஸ்க்காக செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லி வாலிபரின் வங்கி கணக்கில் நூதன முறையில் பணம் அபேஸ்

பெரம்பூர்: சென்னை பெரவள்ளூர் வெற்றி நகர் ராமசாமி தெருவில் வசித்து வருபவர் ஆச்சாரிய கிருஷ்ணகுமார் (38). இவரது வீட்டில் தனியார் நிறுவனம் மூலம் வழங்கப்படும் வாட்டர் பில்டரை வாங்கி தண்ணீரை சுத்தப்படுத்தி குடித்து வந்தார். கடந்த 21ம் தேதி இவரது வீட்டில் உள்ள வாட்டர் பில்டரை மாற்றுவதற்காக ஆச்சாரிய கிருஷ்ணகுமார் கூகுளில் குறிப்பிட்ட அந்த நிறுவனம் சார்ந்த சர்வீஸ் சென்டரை தேடியுள்ளார். ஒரு தொலைபேசி எண் கிடைத்துள்ளது. அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது வேறு ஒரு தொலைபேசி எண்ணை கொடுத்து, அதில் புகார் தெரிவிக்கும்படி கூறியுள்ளனர்.

உடனே அந்த நம்பருக்கு ஆச்சாரிய கிருஷ்ணகுமார் தொடர்பு கொண்ட போது, ஒரு செயலியை அனுப்பி வைத்து அதனை இன்ஸ்டால் செய்து உங்களது புகாரை பதிவு செய்யுங்கள் என கூறியுள்ளனர். உடனே ஆச்சாரிய கிருஷ்ணகுமார், அந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். அவ்வளவுதான். எந்த ஒரு ஓடிபி எண்ணையும் அவர் யாருக்கும் வழங்கவில்லை. இந்நிலையில் அந்த செயலியை நேற்று பதிவிறக்கம் செய்த ஆச்சார்ய கிருஷ்ணகுமாரின் வங்கி கணக்கிலிருந்து 99,999 ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளது இதனால் அதிர்ச்சியடைந்த ஆச்சாரிய கிருஷ்ணகுமார், திருவிக நகர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து சைபர் கிரைம் போலீசாரின் கவனத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுவாக சைபர் கிரைமில் ஈடுபடும் நபர்கள் குறிப்பிட்ட செயலியை பொதுமக்களுக்கு அனுப்பி ஏதாவது ஒரு வகையில் ஏமாற்றி அவர்களிடமிருந்து ஓடிபி எண்ணை பெற்று அதன் மூலம் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுவார்கள். ஆனால் தற்போது ஓடிபி எண்ணை கூறாமலேயே செயலியை மட்டும் பதிவிறக்கம் செய்ய சொல்லி அதன் மூலமும் பணத்தை திருடுவது அதிகரிக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post வாட்டர் பில்டர் சர்வீஸ்க்காக செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லி வாலிபரின் வங்கி கணக்கில் நூதன முறையில் பணம் அபேஸ் appeared first on Dinakaran.

Related Stories: