கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவனிடம் செல்போன் பறிப்பு: ரவுடி, சிறுவன் கைது

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டையில் கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவனிடம் செல் போன் பறித்து தப்பிய ரவுடி, சிறுவன் கைது செய்யப்பட்டனர். வண்ணாரப்பேட்டை பேரம்பாள் செட்டி தெருவை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் லோகேஷ் (19). பொன்னேரி அடுத்த கவரப்பேட்டையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் மாலை வண்ணாரப்பேட்டை இளையாமுதலி தெருவில் உள்ள டிரைவிங் ஸ்கூலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து வந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள், லோகேசை வழிமடக்கி வீண் தகராறு செய்து பீர் வாங்கி கொடு என மிரட்டியுள்ளனர். அப்போது அவர், என்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். பணம் இல்லை என்றால் உன்னுடைய செல்போனை கொடு என கூறியுள்ளனர். செல்போனை கொடுக்க மறுத்ததால் கோபமடைந்த இருவரும் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து காட்டி செல்போனை தரவில்லை என்றால் குத்திவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன லோகேஷ் செல்போனை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து லோகேஷ் தண்டையார்பேட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கீதா வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், 2 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி லோகேஷிடம் செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தபோது, தண்டையார்பேட்டை வஉசி நகர் 14வது தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (23), மற்றும் 17 வயது சிறுவன் என்பதும், தமிழ்ச்செல்வன் மீது புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் இருப்பதும், வழிப்பறி செய்யப்பட்ட செல்போனை பர்மா பஜாரில் 2000 ரூபாய்க்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரையும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். தமிழ்ச்செல்வனை புழல் சிறையிலும், சிறுவனை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் சேர்த்தனர். இந்த சம்பவம் தண்டையார்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவனிடம் செல்போன் பறிப்பு: ரவுடி, சிறுவன் கைது appeared first on Dinakaran.

Related Stories: