ரயிலில் குட்கா கடத்திய 13 பேர் கைது

கோவை: கோவை வந்த ரயிலில் குட்கா கடத்திய 13 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை ரயில் நிலையத்தில் நேற்று ரயில்வே பாதுகாப்பு படை, ரேஸ்கோர்ஸ் போலீசார், ரயில்வே போலீசார் சோதனை செய்தனர். அப்போது பாட்னாவில் இருந்து எர்ணாகுளம் நோக்கி சென்ற ரயிலில் வந்த பயணிகளில் சிலரிடம் பிளாட்பாரத்தில் வைத்து சோதனை நடத்தப்பட்டது. பொருட்கள், துணிப்பைகளில் போலீசார் சோதனையிட்ட போது சிலரிடம் குட்கா, பான்பராக் போன்ற போதை பாக்கு பாக்கெட்டுகள் இருந்தன. 13 பேரிடம் இருந்து 40 கிலோ எடையிலான குட்கா பாக்கெட்டுகள் சிக்கியது. இவற்றை ரேஸ்கோர்ஸ் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக, பீகாரை சேர்ந்த மணீஷ்குமார் (26), ஷா (23), சாந்தகுமார் (27), ரிஷப் (23) உட்பட 13 பேரை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில்,‘‘கட்டட வேலைக்காகவும், தனியார் நிறுவனங்களில் கூலி வேலை செய்யவும் இங்கு வந்தோம். கோவையில் 6 மாதம் தங்கி வேலை செய்வோம். பின்னர், சொந்த ஊர் சென்று ஒரு மாதம் ஓய்வு எடுத்து மீண்டும் கோவைக்கு வந்து விடுவோம். நாங்கள் இங்கு தங்கி வேலை செய்யும் இடத்தில் பயன்படுத்துவோம். தினமும் 10 முதல் 20 பாக்கெட் போதை பாக்கு போடுவோம்.

எனவே, தான் சொந்த ஊரில் இருந்து இவற்றை கொண்டு வந்தோம். எங்கள் ஊரில் 2 ரூபாய் முதல் 5 ரூபாய்க்கு போதை பாக்கெட் கிடைக்கிறது. இங்கு 50 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். நாங்கள் இந்த போதை பாக்கு போட்டு அதற்கு அடிமையாகி விட்டோம். இது இல்லாமல் எங்களால் இருக்க முடியாது’’ என்றனர்.போலீசார், தொழிலாளர்கள் தங்கள் சொந்த பயன்பாட்டிற்கு தான் குட்கா கொண்டு வந்தார்களா?, விற்பனை செய்வதற்கா என விசாரித்து வருகின்றனர்.தினமும் கோவை வரும் வடமாநில ரயில்களில் மூட்டை மூட்டையாக போதை பாக்கு கடத்தி வருவதாக தெரிகிறது.வெளி மாநிலங்களில் குட்காவிற்கு தடை இல்லாத நிலையில் தமிழகத்தில் இவற்றின் புழக்கத்தை தடுக்க ரயில்வே போலீசாருடன் இணைந்து உள்ளூர் போலீசார் அடிக்கடி சோதனையில் ஈடுபட்டு கடும் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post ரயிலில் குட்கா கடத்திய 13 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: