கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் நியாயமான முறையில் வழக்கு நடைபெற வேண்டும்: தமிழக ஆளுநரை சந்தித்த பிறகு எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராயம் சம்பவத்தை காரணம் காட்டி அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையை கடந்த சில நாட்களாக புறக்கணித்து வருகிறார்கள். கேள்வி-நேரம் முடிந்ததும் இதுபற்றி விவாதிக்கலாம் என்று பலமுறை சபாநாயகர் அப்பாவு மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியும், பிடிவாதமாக அதிமுக உறுப்பினர்கள் பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்காமல், ஆர்ப்பாட்டம், பேட்டி என ஒவ்வொரு நாளும் ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்றும் தொடர்ந்து 4வது நாளாக சட்டப்பேரவை கூட்டத்தை அதிமுக புறக்கணித்தனர். இதைத்தொடர்ந்து, சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் நேற்று மதியம் 12 மணிக்கு சந்தித்து மனு அளித்தனர். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து விட்டு வெளியே வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரித்தால் மட்டுமே நியாயமான விசாரணை நடைபெறும். அதனால்தான் தமிழக ஆளுநரை சந்தித்து, அதிமுக சார்பில் கோரிக்கை வைத்துள்ேளாம். தற்போது நடைபெறும் விஷசாராய ரெய்டுகளை முன்கூட்டியே செய்திருக்கலாம். வனத்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் விஷ சாராயம் காய்ச்ச வாய்ப்பு இல்லை.

ஒரு நபர் விசாரணை ஆணையம் மூலம் நியாயம் கிடைப்பது சந்தேகம்தான். கள்ளக்குறிச்சி வழக்கு நேர்மையான முறையில் விசாரிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். எடப்பாடி பழனிசாமியுடன் அனைத்து அதிமுக எம்எல்ஏக்கள் உடன் சென்றிருந்தனர். அவர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.

The post கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் நியாயமான முறையில் வழக்கு நடைபெற வேண்டும்: தமிழக ஆளுநரை சந்தித்த பிறகு எடப்பாடி பழனிசாமி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: