மதுவிலக்கு திருத்தச்சட்டம் நாளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937-ல் திருத்த மசோதா நாளை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவகாரத்தில் பேசிய பா.ம.க உறுப்பினர் ஜி.கே.மணி, காவல்துறையில் கருப்பு ஆடுகள் உள்ளதாக கருணாநிதியும், ஜெயலலிதாவும் கடந்த காலத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர். அதனை இன்று நானும் சுட்டிக் காட்டுகிறேன். அவர்களை கண்டறிய வேண்டியது அரசின் கடமை. காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். குறிப்பாக ஐந்தாவது காவல் ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இது உருவாக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.

ஆனாலும் இடைக்கால அறிக்கை தான் தாக்கல் செய்யப்பட்டதே தவிர, முழு அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. முழு அறிக்கை விரைந்து தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு கருணாநிதி தான் காரணம். பல காவலர்கள், அதிகாரிகள் 14 ஆண்டுகள் ஆகியும் பதவி உயர்வு அளிக்கப்படாமல் உள்ளனர். பணியின் தன்மை உணர்ந்து எட்டு ஆண்டுக்கு ஒருமுறை பதவி உயர்வு வழங்க வேண்டும். முதலமைச்சர் இதனை பரிசீலிக்க வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப காவலர்கள் எண்ணிக்கை இல்லாத சூழல் உள்ளது. எனவே மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப காவலர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு.. பள்ளிக்கூடம் அருகாமையில் கஞ்சா விற்கப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினார். இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர், போதை பொருள் விற்பனை செய்தல், உயிருக்கு ஆபத்து விளைவித்தல் போன்ற குற்றங்களுக்கு ஆன தண்டனை போதுமானதாகவும், கடுமையானதுவும் இல்லை. இது போன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையைக் கடமையாக்கி, குற்றங்களை முற்றிலும் தடுத்த முதற்கட்டமாக தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 இல் திருத்த மசோதா ஒன்று நாளை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும், என தெரிவித்தார்.

The post மதுவிலக்கு திருத்தச்சட்டம் நாளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: