செல்போனை திருடியதாக கூறியதால் ஆத்திரம்: அண்ணனை கொன்று எரித்த தம்பி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஒடப்பவிடுதி காட்டாற்று பாலம் அருகே கடந்த 9ம் தேதி பாதி எரிந்த நிலையில் ஒரு உடல் கிடந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இதில், சடலமாக மீட்கப்பட்டவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா கரிக்காடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் மகன் முல்லைவேந்தன்(23) என தெரியவந்தது. போலீசார் கரிக்காடிபட்டி சென்று முல்லைவேந்தன் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இதில் முல்லைவேந்தனின் தம்பி முகிலன்(21) முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் முகிலன், தனது நண்பர்களான அதே கிராமத்தை சேர்ந்த அனீஸ்வரன்(19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து முல்லைவேந்தனை அடித்து கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 3 பேரையும் பிடித்து விடிய விடிய விசாரணை நடத்தினர். இதுகுறித்து முகிலன் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: குடிப்பழக்கம் உள்ள முல்லைவேந்தன் தினமும் குடித்துவிட்டு போதையில் வந்து அடிதடி தகராறில் ஈடுபட்டு வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன் பைக் விபத்தில் சிக்கிய முல்லைவேந்தன் மனநிலை பாதிக்கப்பட்டதுபோல் இருந்ததுடன் வீட்டில் அனைவரிடமும் தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் ஒரு மாதத்துக்கு முன்பு அவரது செல்போன் மாயமானது. அதை நான் தான் திருடியதாக கூறி தொடர்ந்து என்னிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

அவரை தீர்த்து கட்ட வேண்டும் என முடிவு செய்தேன். அதன்படி கடந்த 7ம் தேதி நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து அண்ணனை அழைத்து கொண்டு ஒடப்பவிடுதி சென்றோம். அங்கு அனைவரும் மது குடித்தோம். அப்போது போதையில் இருந்த அண்ணன் முல்லைவேந்தனை கட்டையால் தாக்கி, கத்தியால் குத்தினோம். இதில் அவர் இறந்துவிட்டார். பின்னர் மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை எடுத்து விறகுக்கட்டையை வைத்து அவரை எரித்துவிட்டு தப்பியதாக அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து முகிலன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து 3 பேரையும் இலுப்பூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி முகிலன், அனீஷ்வரனை புதுக்கோட்டை சிறையிலும், 17வயது சிறுவனை திருச்சி சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.

The post செல்போனை திருடியதாக கூறியதால் ஆத்திரம்: அண்ணனை கொன்று எரித்த தம்பி appeared first on Dinakaran.

Related Stories: