‘மாநில மக்களின் நலன்களே முக்கியம்’ தெ.தே. கட்சிக்கு சபாநாயகர் பதவி அவசியம் இல்லை: எம்பிக்கள் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேச்சு

திருமலை: தெலுங்கு தேசம் கட்சிக்கு சபாநாயகர் பதவி தேவையில்லை. மாநில மக்களின் நலனே முக்கியம் என்ற அமித்ஷாவிடம் கூறியதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு கூறினார். ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்டம் விஜயவாடாவில் சந்திரபாபுநாயுடு தலைமையில் தெலுங்குதேசம் கட்சி எம்.பிக்கள் கூட்டம் நேற்று மாலை நடந்தது. சுமார் 2 மணி நேரம் நடந்த கூட்டத்தில் அமைச்சர் நாராலோகேஷ் மற்றும் எம்பிக்கள் பங்கேற்றனர். இதில் தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற கட்சி தலைவராக லால்கிருஷ்ண தேவராயலு தேர்வு செய்யப்பட்டார். நந்தியாலா நாடாளுமன்ற தொகுதியில் முதல்முறையாக வெற்றி பெற்ற பைரெட்டி சபரிக்கு துணைத்தலைவராக வாய்ப்பு அளிக்கப்பட்டது. பொருளாளராக டகுமல்ல பிரசாத் நியமிக்கப்பட்டார். நாளை தொடங்க உள்ள மக்களவை கூட்டத்தொடரில் கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறை மற்றும் அவையில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் சந்திரபாபு பேசியதாவது: மக்களவை சபாநாயகர் தேர்தலுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் இருந்து போன் வந்தது. போனில் சபாநாயகர் தேர்தல் குறித்து அமித்ஷா என்னிடம் பேசினார். ஆனால் நான், தெலுங்கு தேசம் கட்சிக்கு சபாநாயகர் பதவி தேவையில்லை. அரசுக்கு நிதி மட்டுமே வேண்டும் என்று கூறினேன். மாநிலம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல உதவி கேட்டேன். ஆந்திர மக்கள் கூட்டணியை நம்பி ஆட்சியை கொடுத்ததாக கூறினேன். மேலும் பதவி கேட்டால் மாநில நலன்கள் பாதிக்கப்படும். மாநில நலன்களே நமக்கு முக்கியம். ஒவ்வொரு எம்.பி.க்கும் 3 துறைகளை ஒதுக்குகிறேன்.

அந்தந்த துறைகளில் உள்ள நிதி மற்றும் திட்டங்களை மாநிலத்திற்கு கொண்டு வர வேண்டும். துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள எம்.பி.க்கள், சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் பேசி ஒருங்கிணைக்க வேண்டும். மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 16 எம்.பி.க்கள் பலம் இருப்பதால், மாநிலத்துக்கு கூடுதல் நிதி கிடைக்க முயற்சி எடுக்க வேண்டும். மாநில நலன்கள் ஒவ்வொரு எம்.பி.யின் முதல் கடமையாக இருக்க வேண்டும். அதைவிட முக்கியமாக போலாவரம், அமராவதி பற்றி குறிப்பிட்டு இவற்றின் கட்டுமானப்பணிகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க நிதி பங்களிப்பை கேட்க வேண்டும். இந்த இரண்டும் மாநிலத்துக்கு முக்கியம் என்பதால் இவற்றுக்கு முதல் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 

The post ‘மாநில மக்களின் நலன்களே முக்கியம்’ தெ.தே. கட்சிக்கு சபாநாயகர் பதவி அவசியம் இல்லை: எம்பிக்கள் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: