ஆந்திர மாநிலத்தின் 16வது சட்டப்பேரவை சபாநாயகராக அய்யண்ணபத்ருடு தேர்வு

திருமலை: ஆந்திர மாநில சட்டப்பேரவை சபாநாயகராக சிந்தகயலா அய்யண்ணபத்ருடு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஆந்திர மாநில 16வது சட்டப்பேரவை 2வது நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் சபாநாயகராக மூத்த எம்எல்ஏ சிந்தகயலா அய்யண்ணபத்ருடு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். யாரும் எதிர்த்து போட்டியிடாத நிலையில் அய்யண்ணபத்ருடு போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக தற்காலிக சபாநாயகர் கோரண்ட்லா புட்ச்சையா சவுத்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பின்னர் சபாநாயகரை முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன்கல்யாண் ஆகியோர் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். பதவியேற்பு விழாவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் உள்பட அக்கட்சி எம்.எல்.ஏக்கள் யாரும் பங்கேற்கவில்லை. சபாநாயகர் அய்யண்ணபாத்ருடுவை வாழ்த்தி முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: சட்டசபையின் மூத்த உறுப்பினர்களில் அய்யண்ணபாத்ருடுவும் ஒருவர்.

அவரை அனைவரின் ஒப்புதலுடன் ஒருமனதாக தேர்ந்தெடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. என்டிஆர் அழைப்பின்பேரில் 25 வயதில் அரசியலுக்கு வந்தார். 7 முறை எம்எல்ஏவாகவும், ஒருமுறை எம்பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் என தெலுங்கு மாநிலங்களில் தனி முத்திரை பதித்தவர். எந்த பதவி கொடுத்தாலும் அதனை திறன்பட செயல்படுத்தி நிர்வகித்து வந்தார். அய்யண்ணாவுக்கு 66 வயதாகியும் இன்னும் தீப்பொறியாக நெறிமுறைகள், நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை உள்வாங்கி அரசியல் செய்து வருகிறார். எனது கண்ணியத்தை காப்பாற்றிய பொதுமக்களுக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இதேபோல் துணை முதல்வர் பவன்கல்யாணும், சபாநாயகரை வாழ்த்தி பேசினார்.

 

The post ஆந்திர மாநிலத்தின் 16வது சட்டப்பேரவை சபாநாயகராக அய்யண்ணபத்ருடு தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: