கட்டப்பஞ்சாயத்து எஸ்ஐக்கு மெமோ

திருப்பத்தூர்: திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று வாராந்திர குறைதீர்வு கூட்டம் எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது. அதில் திருப்பத்தூர் எழில் நகர் பகுதியை சேர்ந்த மதன்குமார்(23) என்பவர் அளித்த புகார் மனுவில், ‘நான் பிஇ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளேன். என்னுடைய படிப்பு சான்றிதழ் அதே பகுதியை சேர்ந்த குணா என்பவரிடம் உள்ளது. அதனை கேட்டால் ரூ.40 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதுகுறித்து நான் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தேன். தற்போது சான்றிதழை ஜோலார்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வைத்துள்ளார். அதனை வாங்கி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக எஸ்பி உடனடியாக விசாரணை நடத்தியதில், புகார் அளித்த வாலிபர் மதன்குமார், அவரது படிப்பு சான்றிதழை குணா என்பவரிடம் ரூ.40 ஆயிரத்திற்கு அடமானம் வைத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக புகார் அளித்தபோது, எஸ்ஐ ராஜ்குமார் கட்டப்பஞ்சாயத்து செய்து சான்றிதழை வாங்கி வைத்ததாக தெரிகிறது. இதையடுத்து மனுதாரரின் கல்வி சான்றிதழை வாங்கி வைத்துள்ள எஸ்ஐ ராஜ்குமாருக்கு விளக்கம் அளிக்கும்படி கூறி மெமோ வழங்கி எஸ்பி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

The post கட்டப்பஞ்சாயத்து எஸ்ஐக்கு மெமோ appeared first on Dinakaran.

Related Stories: