டி.என்.பி.எஸ்.சி மூலம் நடத்தப்பட்ட சிவில் நீதிபதிகள் தேர்வில் இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்ற வேண்டும்: கி.வீரமணி வலியுறுத்தல்

சென்னை: டி.என்.பி.எஸ்.சி மூலம் நடத்தப்பட்ட சிவில் நீதிபதிகள் தேர்வில் இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்ற வேண்டும் என கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 01.06.2023 ஆம் தேசிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிப்பு எண்: 12/2023 இன் படி தமிழ்நாட்டில் உள்ள 245 சிவில் நீதிபதி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு 19.08.2023இல் முதல் நிலைத் தேர்வும், 04.11.2023 மற்றும் 05.11.2023 ஆகிய தேதிகளில் இறுதித் தேர்வும், இதில் தேர்வு பெற்றவர்களுக்கு 29.01.2024 முதல் 10.02.2024 வரை நேர்முகத் தேர்வும் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் தற்காலிக தேர்வானவர்கள் பட்டியலை 16.02.2024இல் வெளியிட்டது. இதில் இடஒதுக்கீடு முறை சரியாகப் பின்பற்றப்பட வில்லை என்று கூறி நீதிப்பேராணை மனுக்கள் தாக்கல் செய்து, அதனை ஏற்றுக்கொண்ட மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் 27.02.2024இல் உத்தரவிட்டது. இந்த உத்தரவினைத் தொடர்ந்து 19.03.2024இல் திருத்திய தேர்வானவர்கள் பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இந்த பட்டியலிலும் இடஒதுக்கீடு முறை சரியாகப் பின்பற்றப்படவில்லை என மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

நேரடி நியமனம் (போட்டி தேர்வுகள் மூலம்) செய்யும்போது பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடங்கள் நிரப்பப்படவில்லை என்றால் அதை காலாவதியானதாக அறிவித்து, அடுத்த தேர்வு காலத்திற்கு அதனை எடுத்துச் செல்ல இயலாது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016 கூறுகிறது. ஆனால், மேற்கண்ட சிவில் நீதிபதிக்கான தேர்தல் 38 காலிப்பணிடங்களை பிற்படுத்தப்பட்டவர்களுக்கானது எனக் கணக்கிட்டு Carry Forward செய்துள்ளனர். இதே போல் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலிலும் 18 பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டு தேர்வானவர்களாக அறி விக்கப்பட்ட முடிவால் 15 தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தில் தேர்வானவர்களுக்கு நீதிபதி பதவி மறுக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் தேர்விலேயே இட ஒதுக்கீடு விதிமுறைகள் சரிவர பின்பற்றப்படாதது கவலைக்குரியதாகும். 18 நாட்களிலேயே, திருத்திய தேர்வாளர்கள் பட்டியலை வெளியிட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 60 நாட்களாக உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யாமல் காலம் தாழ்த்தி, தற்போது அவசர கதியில் பணி நியமன உத்தரவை வழங்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த 15 தாழ்த்தப்பட்ட, பட்டியலின தேர்வாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டியது அவசரமும், அவசியமானதும் ஆகும். தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு நீதி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகிறோம். சமூகநீதிக்கான சரித்திர நாயகர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதற்குரிய தக்க பரிகாரங்களைச் செய்து, ஒடுக்கப்பட்டோருக்கு முன்னுரிமை வழங்கும் அரசு தமது அரசு என்று பிரகடனம் செய்ய விழைகிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post டி.என்.பி.எஸ்.சி மூலம் நடத்தப்பட்ட சிவில் நீதிபதிகள் தேர்வில் இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்ற வேண்டும்: கி.வீரமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: