தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு பணிகளை துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தொடங்கி வைத்தார். தமிழ்நாடு 15 லட்சம் ஆண்டுகள் மனிதகுல வரலாற்றுத் தொன்மை கொண்ட நிலப்பரப்பாகும். தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வுகளின் அறிவியல் அடிப்படையிலான பகுப்பாய்வு முடிவுகள் மூலம் தமிழ்நாட்டின் வரலாற்றில் புதிய வெளிச்சம் ஏற்பட்டுள்ளது. கீழடி அகழாய்வு, தொல்லியலாளர்கள் இடையே மட்டுமின்றி உலகத் தமிழர்கள் இடையேயும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்ச் சமூகமானது, கி.மு. ஆறாம் நூற்றாண்டில் படிப்பறிவும் எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கரிமப் பகுப்பாய்வுகளின் முடிவுகள் வாயிலாக உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது.

பொருநை ஆற்றங்கரை நாகரிகம், 3200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதை சிவகளை அகழாய்வில் கிடைக்கப்பெற்ற நெல் உமியினை பகுப்பாய்வு செய்ததன் வாயிலாக உறுதி செய்ய முடிகிறது. அதேபோன்று, கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறை அகழாய்வில் பெறப்பட்ட இரண்டு Accelerator Mass Spectrometry (AMS) காலக் கணிப்பு முடிவுகள் வாயிலாக தமிழ்நாட்டில் இரும்பு 4200 ஆண்டுகளுக்கு முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்டது உறுதி செய்ய முடிகிறது. அண்மைக்கால தொல்லியல் சாதனைகள் மூலம் நமது புகழ்பெற்ற, நீண்ட வரலாற்றில் காணும் பண்பாடு மற்றும் கால வரிசை இடைவெளிகளை நிரப்புவதற்கு நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்காக தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல், வரலாற்றுக் காலம் வரையிலான தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழாய்வு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, பண்பாடு, தொழில்நுட்பம் மற்றும் விழுமியங்களுக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் தற்போது 2024-ஆம் ஆண்டில் கீழ்க்காணும் எட்டு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சென்ற ஆண்டில் எட்டு இடங்களில் அகழாய்வு செய்ததைப் போன்று இவ்வாண்டியிலும் எட்டு இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படவுள்ளது சிறப்பாகும்.

1. கீழடி மற்றும் அதன் அருகிலுள்ள தொல்லியல் தளமான கொந்தகை, சிவகங்கை மாவட்டம் – பத்தாம் கட்டம்
2. வெம்பக்கோட்டை, விருதுநகர் மாவட்டம் – மூன்றாம் கட்டம்
3. கீழ்நமண்டி, திருவண்ணாமலை மாவட்டம் – இரண்டாம் கட்டம்
4. பொற்பனைக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் – இரண்டாம் கட்டம்
5. திருமலாபுரம், தென்காசி மாவட்டம் – முதல் கட்டம்
6. சென்னானூர், கிருஷ்ணகிரி மாவட்டம் – முதல் கட்டம்
7. கொங்கல்நகரம், திருப்பூர் மாவட்டம் – முதல் கட்டம்
8. மருங்கூர், கடலூர் மாவட்டம் – முதல் கட்டம்

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் கடந்த 6.4.2023 அன்று முதலமைச்சர் அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார். அந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் விவரங்கள்:

கீழடி ஒன்பதாம் கட்ட அகழாய்வு விவரங்கள்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்தில் கீழடியில் அமைந்துள்ள பள்ளிச்சந்தை திடலில் 110 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தொல்லியல் மேட்டில் 2014-ஆம் ஆண்டு முதல் தொடர் அகழாய்வுகள் நடைபெற்று வருகின்றன. சென்ற ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இவ்வகழாய்வில் பதினான்கு குழிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தங்க அணிகலன், தந்தத்தினாலான பகடைகள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண்ணால் செய்யப்பட்ட விலங்கின உருவங்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட தக்களிகள், வட்டச்சில்லுகள், அஞ்சனக் கோல்கள், செப்புக் காசுகள், செப்பு ஊசி, இரும்பினால் செய்யப்பட்ட ஆணிகள் என 804 தொல்பொருட்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.

மேலும், வெவ்வேறு நிலைகளிலிருந்து எலும்பு மற்றும் கரி மாதிரிகள் அறிவியல் பகுப்பாய்விற்கு சேகரிக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, அகழ்ந்தெடுக்கப்பட்ட நான்கு அகழாய்வுக் குழிகளில் சுமார் 35 செ.மீ. ஆழத்தில் களிமண் மற்றும் சுண்ணாம்புக் கலவைக் கொண்டு அமைக்கப்பட்ட தரைதளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தரைதளம் 3 முதல் 6 செ.மீ. தடிமனுடன் காணப்படுகிறது. மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில், தரைதளத்தின் கீழே, சுமார் இரண்டு அடி ஆழத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருப்பு-சிவப்பு, சிவப்பு பூச்சு, மற்றும் சிவப்பு நிறப் பானை ஓடுகள் குவியலாக கண்டறியப்பட்டுள்ளன. விரிவான அகழாய்வுகள் மூலம் முழுமையான பண்பாட்டு வளத்தினைக் வெளிக்கொண்டு வருவதற்கு அடுத்தக்கட்ட அகழாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

கொந்தகை நான்காம் கட்ட அகழாய்வு விவரங்கள்
கொந்தகையில் மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வில் 10 x 10 மீ. என்ற அளவிலும் 4 x 4 மீ. என்ற அளவிலும் தோண்டப்பட்ட இரண்டு அகழாய்வுக் குழிகளில் 24 முதுமக்கள் தாழிகள் மூன்று நிலைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஈமத்தாழிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் மனித எலும்புக்கூடுகளுடன் 110 மேற்பட்ட கருப்பு-சிவப்பு மற்றும் சிவப்பு பூச்சு பெற்ற மட்கலன்களும் 9 தொல்பொருட்களும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இத்தொல்பொருட்களில் வேலைப்பாடுகளுடன் சூதுபவள மணிகள், இரும்பினால் செய்யப்பட்ட கத்திகள், உளி, வளையம், குறிப்பிடதக்கவையாகும். இவை தவிர ஈமத்தாழியினுளிருந்து தந்தத்தினால் செய்யப்பட்ட வளையம் ஒன்று முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளது.

வெம்பக்கோட்டை இரண்டாம் கட்ட அகழாய்வு
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை 2021-2022 ஆம் ஆண்டு வெம்பக்கோட்டையில் அகழாய்வு தொடங்கப்பட்டது. இத்தொல்லியல் மேடு உள்ளூர் மக்களால் மேட்டுக்காடு அல்லது உச்சிமேடு என்று அழைக்கப்படுகிறது. வெம்பக்கோட்டை வாழ்விட மேட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் மூலம் இம்மேடானது வரலாற்றுக் கால முதல் -இடைக்கால வரையிலான தொடர்ச்சியான எச்சங்களை வெளிப்படுத்துகிறது. இங்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டு கட்ட அகழ்வாராய்ச்சியில் மொத்தம் 34 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டுள்ளன. மேலும் 7800-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.

நுண்கற்காலக்கருவிகள், கண்ணாடிமணிகள், சுடுமண்ணாலான காதணிகள், உருவங்கள், தக்களிகள், மணிகள், சங்காலானவளையல்கள், மோதிரங்கள், வட்டச்சில்லுகள், இரும்பு உருக்குக் கழிவுகள் மற்றும் பல பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் முழுமை பெறாத சங்குவளையல்கள் மிக அதிகமாக இந்த தொல்லியல் மேட்டில் கிடைக்கின்றன. மேலும், 100-க்கும் மேற்பட்ட இரும்புப் பொருட்களும், 40க்கும் மேற்பட்ட செப்புப் பொருட்களும் கிடைத்துள்ளன. இவ்விடத்தில் பல வரலாற்று சான்றுகளை கண்டெடுத்திட அடுத்தக்கட்ட அகழ்வாய்வு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

கீழ்நமண்டியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு பணிகளின் விவரங்கள்;
கீழ்நமண்டி கிராமம், திருவண்ணாமலை மாவட்டத்தில், வந்தவாசி வட்டத்தில் அமைந்துள்ளது. சுமார் 55 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த இடத்தில் 200-க்கும் மேற்பட்ட பெருங்கற்கால கல் வட்டங்கள் உள்ளன. சில சேதமடைந்த கல் வட்டங்களுக்குள் ஈமப்பேழையின் எச்சங்கள் காணப்படுகின்றன. சென்ற ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் இங்கு புதைவிடம் மற்றும் வாழ்விட பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. புதைவிட பகுதியில் 12 அகழாய்வு குழிகளும், வாழ்விட பகுதியில் 10 அகழாய்வு குழிகளும் தோண்டப்பட்டன.

புதைவிட பகுதியில் மொத்தம் 21 ஈமப்பேழைகள் கண்டறியப்பட்டன அவற்றில் 6 ஈமப்பேழைகள் மட்டுமே முழுமையான நிலையில் உள்ளன, மற்றவை உடைந்தநிலையில் காணப்படுகின்றன. புதைவிட பகுதியில் 30-க்கும் மேற்பட்ட கீறல் குறியீட்டு பானை ஓடுகள் மற்றும் 43 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வாழ்விட பகுதியில் 45 கீறல் குறியீட்டு பானை ஓடுகள் மற்றும் 46 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புதைவிட பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் ஒரு சிறிய குன்றின் மேல் 30-க்கும் மேற்பட்ட கற்கோடாரி பட்டைதீட்டும் பள்ளங்கள் காணப்படுகின்றன.

தற்போது, இவ்விடத்தின் பல்வேறு பண்பாட்டுக் காலவரிசையைப் புரிந்து கொள்ளுதல், புதிய கற்காலத்திலிருந்து இரும்புக் காலக் கட்டத்திற்கு மாறிய பண்பாட்டு மாற்றத்தைப் புரிந்து கொள்ளுதல், இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் மற்றும் இரும்புக் கால மக்களின் ஈம பழக்க நடைமுறைகளை மதிப்பிடுதல், பெருங்கற்கால இடங்களை சரியான தொல்லியல் சூழலில் அடிப்படையில் அடையாளம் காணுதல் இந்த அகழாய்வின் நோக்கமாகும்.

பொற்பனைக்கோட்டையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு பணிகளின் விவரங்கள்;
பொற்பனைக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டத்தில் மணிமங்கலம் மற்றும் ஆலங்குடி இடையே அமைந்துள்ளது. செங்கல்லின் அளவு, நினைவு கல், கருப்பு-சிவப்பு பானை ஓடுகள், குறியீட்டு அடையாளங்கள், பிராமி பொறிக்கப்பட்ட பானை ஓடுகளின் வாயிலாக இந்த இடம் சங்க கால தொல்லியல் தளமாக அறியப்படுகிறது. சென்ற ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் வட்ட வடிவ சுட்ட செங்கற்கட்டுமானமானது சுமார் 38 செ.மீ. ஆழத்தில் கண்டறியப்பட்டது. வடமேற்கு பகுதியில் தொடங்கி தென்கிழக்கு பகுதிவரை நீண்டு, மூன்று அடுக்கினைக் கொண்டுள்ளது. இதன் விட்டம் 230 செ.மீ. ஆகும். இதன் தொடர்ச்சியாக, வடகிழக்கு பகுதியில் 57 செ.மீ. ஆழத்தில் வாய்க்கால் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதன் நீளம் 255 செ.மீ. ஆகும். மேலும், வட்டச்சில்லுகள், கெண்டிமூக்குகள், கண்ணாடி வளையல்கள், கண்ணாடி மணிகள், சுடுமண் விளக்கு, தக்களிகள், காசு, சூதுபவளமணிகள், மெருகேற்றும் கற்கள், எலும்பு முனை கருவிகள், ஆறு இதழ் கொண்ட தங்க மூக்குத்தி / தோடு என 533 தொல்பொருட்களும், கீறல் குறியீடுகளும், தமிழி (தமிழ் பிராமி) எழுத்துப் பொறிக்கப்ட்ட மட்கல ஓடு ஆகியவை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில், ஏராளமான இரும்புக் கசடுகள், சுடுமண் குழாய்கள், உலைகள் கிடைப்பது தொடக்க வரலாற்றுக் காலங்களிலும் இடைக்காலத்திலும் இரும்புத் தொழில் முழு வீச்சில் இருந்தது என்பதைக் குறிக்கிறது. இரும்புக்காலப் பண்பாட்டின் வேர்களைத் தேடுவது இந்த அகழாய்வின் நோக்கமாகும்.

திருமலாபுரத்தில் முதல் கட்ட அகழ்வாய்வுப் பணி தொடக்கம்;
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், வாசுதேவநல்லூர் திருமலாபுரம் கிராமத்தில் குலசேகரப்பேரி கண்மாயின் அருகில் சாலை அமைப்பதற்காக மண் எடுக்கும்பொழுது ஏறக்குறைய நான்கு அடி ஆழத்தில் தொல்லியல் எச்சங்கள் வெளிக்கொணரப்பட்டன. இத்தொல்லியல் மேடானது சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இப்புதைவிடப்பகுதியில் கற்பதுக்கை மற்றும் முதுமக்கள் தாழி வகை ஈமச்சின்னங்கள் அமைந்துள்ளது. இப்பகுதியில் வெண்மை நிறத்தினால் அலங்கரிக்கப்பட்ட கிண்ணங்கள் மற்றும் மூடிகளும், மெருகூட்டப்பட்ட சிவப்பு பானை ஓடுகள், ஈமத்தாழிகள், செம்பினாலானக் கிண்ணம், இரும்பினாலானப் பொருட்கள் (ஈட்டி, வாள், குறுவாள், வில் கத்தி) ஆகியவை முக்கிய தொல்பொருட்களாகும்.

மேற்கண்ட விவரங்களின்படியில், இத்தளத்தின் தன்மையைப் புரிந்து கொள்ளுதல், இத்தளத்தில் உள்ள பெருங்கற்கால புதைவிடத்தின் எல்லையைக் கண்டறிதல், இரும்புக் கால வாழ்விடப்பகுதியைக் கண்டறிதல். வாழ்விடப்பகுதியின் தன்மை மற்றும் பெருங்கற்கால புதைவிடத்தைப் பற்றிய கூடுதல் சான்றுகளை வெளிக்கொண்டுவருதல், இரும்புக்கால மக்களின் ஈமச்சடங்கைப் பற்றி அறிந்து கொள்ளுதல், இப்பகுதியின் வாழ்வியல், கலை, கலாச்சாரம், மட்பாண்டங்கள் மற்றும் குடியேற்றமுறைப் பற்றி மேலும் அறிதல், இரும்பு காலம் மற்றும் தொடக்க வரலாற்றுக் காலங்களுக்கு இடையே உள்ள தொடர்பை கண்டறிதல் போன்ற முக்கிய நோக்கங்களுடன் அகழாய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னானூரில் முதல் கட்ட அகழ்வாய்வுப் பணி தொடக்கம்;
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க கிராமமான சென்னானூர் அமைந்துள்ளது. சென்னானூர் குட்டை என்னும் மலையின் மேற்கு பக்க அடிவாரத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் தொல்லியல் மேடானது காணப்படுகின்றது. இத்தொல்லியல் மேடானது சுமார் 2.5 மீ அளவுக்கு தொல்லியல் எச்சங்களை தாங்கி நிற்கிறது. இத்தொல்லியல் மேட்டில் மேற்கொள்ளப்பட்ட களாய்வில் கருப்பு சிவப்பு பானை ஓடுகள், கருப்பு வண்ண பானை ஓடுகள், சிவப்பு வண்ண பூச்சு பானை ஓடுகள் மற்றும் சொர சொரப்பான சிவப்பு வண்ண பானை ஓடுகள் அதிகளவில் காணப்படுகின்றது. இவை தவிர நுண்கருவி காலத்தினை சார்ந்த கருவிகள், புதிய கற்காலத்தினை சார்ந்த கற்கருவிகள், வட்ட சில்லுகள், சுடுமண் விளக்கு, தக்களி போன்றவை இத்தொல்லியல் மேட்டில் கண்டெடுக்கப்பட்டன.

இவை தவிர இப்பகுதியில் உழவு தொழிலின் சங்ககால செங்கற்கல் பல கிடைத்துள்ளது. இவை தவிர தொல்லியல் மேட்டின் அருகில் உள்ள மலையில் மூன்று குகைகளில் பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இவை வெண்மை நிறத்தில் தீட்டப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற சான்றுகளின் அடிப்படையில் சென்னானூரில் அகழாய்வு மேற்கொண்டால் புதிய கற்காலம் மற்றும் நுண்கற்கால மக்களின் பண்பாட்டினை அறியலாம். மேலும், இப்பகுதியில் மனிதர்கள் எந்த கால கட்டத்தில் இருந்து தொடர்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதனை அறிய முடியும். சென்னானூரில் மேற்கொள்ளப்படும் அகழாய்வின் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வரலாறு முழுமையாக அறிய முடியும்.

கொங்கல்நகரத்தில் முதல் கட்ட அகழ்வாய்வுப் பணி தொடக்கம்;
கொங்கல்நகரம் கிராமம், உடுமலைப்பேட்டை வட்டம், திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தற்போதைய கொங்கல்நகரம் கிராமத்திலிருந்து. 1 கி.மீ தொலைவில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் தொல்லியல் மேடு அமைந்துள்ளது. மேலும், பெருங்கற்கால ஈமச்சின்னங்களான கல்வட்டம் மற்றும் கற்திட்டை கொங்கல்நகரம் கிராமத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் அமைந்துள்ளது. இப்பகுதி பல்வேறு இரும்புக் காலத் தளங்கள், பாறை ஓவியங்கள், எண்ணற்ற இரும்புக் காலம் மற்றும் தொடக்க வரலாற்று பெருங்கற்கால நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இங்குள்ள வாழ்விட தொல்லியல் மேடு 20 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் தற்போதைய தரை மட்டத்திலிருந்து 2 மீட்டருக்கு மேல் உயர்ந்து காணப்படுகின்றது.

புதைவிடப் பகுதியில் கல்வட்டங்கள், பரல் உயர் பதுக்கை, கூராக்கப்பட்ட கற்பதுக்கை மற்றும் முதுமக்கள் தாழிகள் காணப்படுகின்றன. ஒரு பரல் உயர் பதுக்கையின் விளிம்பில் குத்துக்கல் ஒன்றும் அமைந்துள்ளது. குறியீடுகள் மற்றும் தமிழி (தமிழ் பிராமி) பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் தவிர, பானை வனைப்பான், காதணி, சேர நாணயம் போன்ற பிற முக்கிய தொல்பொருட்களும் இவ்விடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன. பரந்த தொழில்மயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல் அதன் ஆரம்ப கவனத்தை கோருகிறது. இப்பகுதியில் குறியீடுகள் மற்றும் தமிழியின் தோற்றத்தைக் கண்டறியவும், அதன் மண் அடுக்கு மற்றும் கால வரிசையை ஆய்வு செய்யவும், இது மிகவும் சாத்தியமான தளமாகும்.

மருங்கூரில் முதல் கட்ட அகழ்வாய்வுப் பணி தொடக்கம்;
மருங்கூர் கடலூரிலிருந்து மேற்கே 32 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும். மருங்கூர் கிராமத்திலிருந்து கீழக்கொல்லை செல்லும் சாலையின் வடக்குப் பகுதியில், குளத்தின் கிழக்குப் பகுதியில், சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் ஒரு தொல்லியல் மேடு உள்ளது. வெளிர் சாம்பல் நிற ரவுலட் மட்பாண்டங்கள், கருப்பு மற்றும் சிவப்பு பானை ஓடுகள் மேட்டின் மையத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன. மேட்டின் மேற்குப் பகுதியில் செங்கல் கட்டுமானப் பகுதி உருவாகியுள்ளது. இந்த கட்டுமானத்திற்கு 7 x 21 x 42 செ.மீ அளவுள்ள செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

செங்கல் கட்டுமானம் வெளிப்படும் பகுதிக்கு அருகில் குளத்தின் கரையில் ஏராளமான கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்கள் காணப்படுகின்றன. இவ்வகழாய்வுத் திட்டத்தின் நோக்கம், தொல்லியல் ரீதியான இடங்களை உருவாக்குதல், குடியேற்றத் திட்டங்கள், தொல்லியல் தன்மை என்பவற்றை வெளிப்படுத்துவதாகும். மேலும், இரும்புக் காலப் பண்பாட்டின் மையத்தைக் கண்டறிவதும், இப்பகுதியின் ஆரம்பகால வரலாற்றுக் காலம் தொடர்பான சான்றுகளை பகுப்பாய்வு செய்வதும் ஆகும்.

‘பெரும்பாலை அகழாய்வு அறிக்கை மற்றும் தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி – XXVIII ஆகிய இரண்டு நூல்கள் வெளியீடு

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் 2022-2023 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டம், பெரும்பாலை என்னும் தளங்களில் மேற்கொண்ட அகழாய்வின் அறிக்கை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 138 கல்வெட்டுகளில் விளக்க உரைகள் அடங்கிய தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி – XXVIII ஆகிய இரண்டு நூல்களை முதலமைச்சர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா

சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க. மணிவாசன், தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர் / ஆணையர் (மு.கூ.பொ) த. உதயசந்திரன், மற்றும் அரசு உயர் அலுவலர்களும், காணொலிக் காட்சி வாயிலாக விருதுநகர் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர், சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், சிவகங்கை மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித், தொல்லியல் துறை கீழடி இயக்குநர் மா.இரமேஷ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

The post தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு பணிகளை துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Related Stories: