சென்னை திருவொற்றியூரில் மாடு முட்டி படுகாயம் அடைந்த பெண்ணின் உறவினர்கள் முற்றுகை போராட்டம்

சென்னை: சென்னை திருவொற்றியூரில் மாடு முட்டி படுகாயம் அடைந்த பெண்ணின் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான முழு மருத்துவ செலவையும் மாநகராட்சியே ஏற்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

திருவொற்றியூர் பகுதியில் சாலையில் திரிந்த மாடு ஒன்று, திடீரென பெண் ஒருவரை தூக்கி பந்தாடியதுடன், சாலையில் நடந்து சென்ற பலரை முட்டியதால் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவொற்றியூர் கிராம தெருவில் நேற்று சாலையில் நடந்து சென்ற எருமை மாடு ஒன்று திடீரென்று பொதுமக்கள் மீது பாய்ந்தது. இதில் மதுமதி என்ற இளம்பெண்ணை கொம்பால் தூக்கி சுமார் 50 மீட்டர் இழுத்துச் சென்றது.

இதை பார்த்த பொதுமக்கள், மிகவும் சிரமப்பட்டு எருமை மாட்டிடம் இருந்து அந்த இளம்பெண்ணை மீட்டனர். இதில் அவருக்கு கை கால் மற்றும் உடம்பில் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவரை பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து எருமை மாடு பொதுமக்கள் விரட்டியதால் அப்பகுதியில் உள்ள இருசக்கர வாகனம் மற்றும் இன்னும் சில நடந்து சென்றவர்களை மோதி தள்ளியது. இதனால் பலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் மாடு முட்டி காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உறவினர்கள் 20க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை ரூ.1 லட்சத்திற்கும் மேலாக மருத்துவ செலவு செய்துவிட்டதாகவும், மேற்கொண்டு செலவு செய்ய பணம் இல்லை எனவும் மாநகராட்சி அதிகாரிகளே இதற்கான முழு பொறுப்பு ஏற்க வேண்டும் எனவும் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post சென்னை திருவொற்றியூரில் மாடு முட்டி படுகாயம் அடைந்த பெண்ணின் உறவினர்கள் முற்றுகை போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: