கோயில் திருவிழாவில் பொதுமக்கள் முன்னிலையில் வாலிபரை வெட்ட முயன்ற அதிமுக கவுன்சிலர் மகன்: பல்லாவரம் அருகே பரபரப்பு

பல்லாவரம்: பல்லாவரம் அருகே கோயில் திருவிழாவில் பொதுமக்கள் முன்னிலையில், வாலிபரை பட்டா கத்தியால் வெட்ட முயன்ற அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகனால் பெரும் பரபரப்பு நிலவியது. பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், காமராஜபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு 57வது ஆண்டு கொடி திருவிழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் மாலை ஆலயத்தில் 12ம் நாள் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

விழாவில் பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வழிபாடு செய்ய வருகை தந்திருந்தனர். அவ்வாறு காமராஜபுரம், புதூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (23) என்ற வாலிபரும், அந்த தேவாலயத்திற்கு வருகை தந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலரான அனகாபுத்தூர், காமராஜ்புரத்தை சேர்ந்த லியோன் என்பவரது மகன் டிவோ (23) என்பவர், கார்த்திக்கிடம் மாற்று மதத்தை சேர்ந்த நீ எப்படி இங்கு வரலாம் என்று கூறி தகராறில் ஈடுபட்டார்.

இதில், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த வாலிபர் டிவோ, தனது வீட்டிற்கு சென்று, அரிவாளை எடுத்து வந்து, பொதுமக்கள் முன்னிலையில் கார்த்திக்கை வெட்டுவதற்கு பாய்ந்தார். இதனைக்கண்டு, அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நாலாபுறமும் அலறி அடித்துக்கொண்டு சிதறி ஓடினர். ஒருசிலர் தைரியமாக முன்வந்து வாலிபர் டிவோ கையில் இருந்த அரிவாளை போராடி பிடுங்கினர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த பொதுமக்களில் சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அதன் அடிப்படையில் சங்கர் நகர் போலீசார், தகராறில் ஈடுபட்ட வாலிபர் டிவோவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் திருவிழாவில் பொதுமக்கள் முன்னிலையில் வாலிபரை அரிவாளால் வெட்டப் பாய்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகனால் அனகாபுத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post கோயில் திருவிழாவில் பொதுமக்கள் முன்னிலையில் வாலிபரை வெட்ட முயன்ற அதிமுக கவுன்சிலர் மகன்: பல்லாவரம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: