பள்ளி சீருடை துணிகள் 20ம் தேதிக்குள் வழங்கப்படும்: அமைச்சர் ஆர்.காந்தி அறிவிப்பு

சென்னை: பள்ளி சீருடை வழங்கும் திட்டம் மற்றும் இதர திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தான ஆய்வு கூட்டம் தலைமை செயலகத்தில் அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் நடப்பாண்டிற்கு சமூக நலத்துறைக்கு விநியோகிக்கப்பட வேண்டிய இரண்டு இணை பள்ளி சீருடை துணிகள் விநியோக முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.

கடந்த சட்டமன்ற பேரவை அறிவிப்புகள் மீதான தொடர் நடவடிக்கை மற்றும் நிறைவேற்றப்பட வேண்டிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், துணிநூல் துறையில் செயல்படுத்தப்படும் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் மற்றும் உத்தேசிக்கப்பட்டுள்ள ஜவுளி நகரம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் மாண்புமிகு அமைச்சர் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காந்தி பேசியதாவது:

நடப்பு ஆண்டிற்கு சமூக நலத் துறைக்கு விநியோகிக்கப்பட வேண்டிய 237.36 லட்சம் மீட்டர் துணிகளில் இன்றைய தேதி வரையில் 149.65 லட்சம் மீட்டர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. சமூக நலத் துறைக்கு தினசரி துணிகள் விநியோகம் செய்யப்படும் அளவினை அதிகரித்து வருகிற 20ம் தேதிக்குள் இரண்டு இணைக்கான துணிகள் முழுமையாக வழங்கப்படும்.

2025 பொங்கல் பண்டிகைக்கான வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்காக, சேலைகள் மற்றும் வேட்டிகளின் மாதிரியை உற்பத்தி செய்து அதன் முழுவிலை பட்டியல் விவரத்துடன் அரசுக்கு அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்கள் குறித்த நேரத்தில் மக்களை சென்றடையும் வகையில் நடவடிக்கைகள் மற்றும் பணிகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் கைத்தறி செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் ஆனந்தகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post பள்ளி சீருடை துணிகள் 20ம் தேதிக்குள் வழங்கப்படும்: அமைச்சர் ஆர்.காந்தி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: