பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பைனல்: ஸ்வியாடெக் – ஜாஸ்மின் இன்று பலப்பரீட்சை

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் நடப்பு சாம்பியன் இகா ஸ்வியாடெக்குடன், முதல் முறை சாம்பியனாகும் கனவில் ஜாஸ்மின் பவோலினி பலப்பரீட்சை நடத்துகிறார்.
நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (23 வயது, போலந்து) 4வது முறையாக பிரெஞ்ச் ஓபன் பைனலில் விளையாட உள்ளார். ஏற்கனவே விளையாடிய 3 பைனலிலும் வென்று (2020, 2022, 2023) கோப்பையை முத்தமிட்டுள்ள இகா, எதிர்பார்த்தது போலவே இம்முறையும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஹாட்ரிக் சாதனை படைக்கும் முனைப்புடன் அவர் உற்சாகமாகக் களமிறங்குகிறார்.

அதே சமயம், முதல்முறையாக கிராண்ட் ஸ்லாம் பைனலில் விளையாட உள்ளார் ஜாஸ்மின். பிரெஞ்ச் ஓபன் பைனலில் விளையாடும் 2வது இத்தாலி வீராங்கனை என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. இத்தொடரில் 5வது முறையாக விளையாடும் ஜாஸ்மின், இதற்கு முன் 2வது சுற்று வரைதான் முன்னேறி இருந்தார். இம்முறை கஜகஸ்தான் நட்சத்திரம் எலனா ரைபாகினா உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி பைனல் வரை முன்னேறி இருப்பதால், பைனலில் இகாவுக்கு சரியான சவால் காத்திருக்கிறது.

* இருவரும் 2 முறை மோதியுள்ளதில் இகா 2-0 என ஆதிக்கம் செலுத்தியுள்ளார்.
* இதுவரை இகா 4 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும், 22 மாஸ்டர்ஸ் பட்டங்களையம், 4 சிறு போட்டிகளிலும், 3 ஐடிஎப் போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
* முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் பைனலில் ஆடும் ஜாஸ்மின் 2 மாஸ்டர்ஸ், 8 ஐடிஎப், 3 சிறு போட்டி பட்டங்களை கைப்பற்றி இருக்கிறார்.
* வெற்றி பெறுபவருக்கு பிரெஞ்ச் ஓபன் கோப்பையுடன் முதல் பரிசாக ரூ.21 கோடி வழங்கப்படும். 2வது இடம் பிடிக்கும் வீராங்கனைக்கு கேடயத்துடன் ரூ.10.5 கோடி கிடைக்கும்.

The post பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பைனல்: ஸ்வியாடெக் – ஜாஸ்மின் இன்று பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Related Stories: