சென்னையில் மோசமான வானிலை காரணமாக 2வது நாளாக விமான சேவை பாதிப்பு: பயணிகள் அவதி

மீனம்பாக்கம்: சென்னை, புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து, மோசமான வானிலை நிலவியதால், சென்னை விமான நிலையத்தில் இரண்டாவது நாளாக நேற்று வருகை-புறப்பாடு என 19 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பிற்பகல் திடீரென இடி மின்னல், சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் 2வது நாளாக நேற்றும் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. திருவனந்தபுரத்திலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு 136 பயணிகளுடன் வந்து கொண்டு இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், டெல்லியில் இருந்து சென்னைக்கு 147 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், அபுதாபியில் இருந்து சென்னைக்கு 188 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த எத்தியாட் ஏர்லைன்ஸ் விமானம், திருச்சியிலிருந்து 72 பயணிகளுடன் சென்னை வந்து கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், அந்தமானில் இருந்து 147 பயணிகளுடன் சென்னை வந்து கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 5 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானிலேயே வட்டமடித்து கொண்டிருந்தன. சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அந்த 5 விமானங்களையும் கண்காணித்து தகவல்கள் பரிமாறிக் கொண்டு இருந்தனர்.

இந்நிலையில் அபுதாபியில் இருந்து வந்த எத்தியாட் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு எரிபொருள் குறைவாக இருந்ததால், அந்த விமானத்தை மட்டும் பெங்களூருக்கு திருப்பி அனுப்பினர். மற்ற 4 விமானங்கள் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தன. பின்னர் வானிலை சீரடைந்த பிறகு மாலை 4 மணிக்கு மேல் விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கின. இதற்கிடையே சென்னையிலிருந்து புறப்படும் விமானங்களான புனே, கொல்கத்தா, ராஜமுந்திரி, மும்பை, ஐதராபாத், கோவா, டெல்லி, கோவை, மதுரை உள்ளிட்ட 14 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

The post சென்னையில் மோசமான வானிலை காரணமாக 2வது நாளாக விமான சேவை பாதிப்பு: பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: