உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை

நியூயார்க்: ஐசிசி டி20 உலக கோப்பை தொடரின் 8வது லீக் ஆட்டத்தில், ஏ பிரிவில் உள்ள இந்தியா – அயர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. நியூயார்க் நகரின் நஸ்ஸாவ் கவுன்டி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல் பரபரப்புகள் முடிந்து சில நாட்களே ஆன நிலையில், ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே சர்வதேச களத்தில் இறங்குகிறது.

ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்த கோஹ்லி, அவருடன் ரோகித், ஜெய்ஸ்வால், சூரியகுமார், சஞ்சு சாம்சன், ஹர்திக், ஷிவம் துபே, ஜடேஜா, அக்சர் என அதிரடிக்கு பஞ்சமில்லாத பேட்டிங் வரிசை அயர்லாந்து பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக இருக்கும். பும்ரா, அர்ஷ்தீப், சிராஜ் வேகக் கூட்டணியும், ஜடேஜா, அக்சர், சாஹல் அல்லது குல்தீப் சுழலும் விக்கெட் வேட்டையில் கலக்க காத்திருக்கின்றன.
சர்வதேச களத்தில் இன்னும் கத்துக்குட்டி அணியாக இருக்கும் பால் ஸ்டர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணியிலும் கர்டிஸ் கேம்பர், ஜோஷ் லிட்டில், ஹாரி டெக்டர், லார்கன் டக்கர், ஆண்டி பால்பிர்னி என அதிரடி வீரர்கள் அணிவகுக்கின்றனர்.

டி20 உலக கோப்பையில் 9வது முறையாக களம் காணும் அயர்லாந்து, ஒரே ஒரு முறை மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளது. அதிலும் உலக கோப்பையில் மட்டுமின்றி, அயர்லாந்து எஞ்சிய சர்வதேச களங்களில் நடந்த ஆட்டங்களிலும் இந்தியாவை வீழ்த்தியதே இல்லை என்ற வரலாறு உள்ளது. அது இன்றைய ஆட்டத்திலும் தொடரும் வாய்ப்பே அதிகம். மீறி ஏதாவது அதிசயம் நடந்தால் அது அயர்லாந்து கிரிக்கெட்டில் வரலாற்று சாதனையாக அமையும்.

நேருக்கு நேர்

* இரு அணிகளும் 7 டி20ல் மோதியுள்ளதில், இந்தியா 6-0 என ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

* கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் இந்தியா 4ல் வென்றுள்ளது (ஒரு ஆட்டம் ரத்து).

* இந்தியா கடைசியாக விளையாடிய 5 டி20ல் 4ல் ஆப்கானை வீழ்த்தி உள்ளது. ஒன்றில் தென் ஆப்ரிக்காவிடம் தோல்வியை சந்தித்துள்ளது.

* அயர்லாந்து கடைசியாக விளையாடிய 5 டி20ல் 2ல் நெதர்லாந்தையும், ஒரு ஆட்டத்தில் ஸ்காட்லாந்தையும் வீழ்த்தி உள்ளது. நெதர்லாந்துக்கு எதிரான ஒரு ஆட்டம் கைவிடப்பட்டது. பாகிஸ்தானிடம் ஒரு ஆட்டத்தில் தோற்றுள்ளது.

* டி20 உலக கோப்பையில் இரு அணிகளும் ஒரு முறை மட்டும் மோதியுள்ளன. இங்கிலாந்தில் 2009ம் ஆண்டு நடந்த உலககோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

* இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, யஜ்வேந்திர சாஹல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், விராத் கோஹ்லி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ரிஷப் பன்ட், அக்சர் படேல், சஞ்சு சாம்சன், சூரியகுமார் யாதவ்.

* அயர்லாந்து: பால் ஸ்டர்லிங் (கேப்டன்), ராஸ் அடேர், மார்க் அடேர், ஆண்டி பால்பிர்னி, கர்டிஸ் கேம்பர், கேரத் டெலனி, ஜார்ஜ் டாக்ரெல், கிரகாம் ஹியூம், ஜோஷ் லிட்டில், பாரி மெக்கார்தி, நீல் ராக், ஹாரி டெக்டர், லார்கன் டக்கர், பென் ஒயிட், கிரய்க் யங்.

The post உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Related Stories: