புதுடெல்லி: இந்திய மகளிர் கிரிக்கெட் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஒரு நாள் போட்டிகளுக்கான பேட்டிங் தர வரிசைப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். ஐசிசி மகளிர் ஒரு நாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்தியாவை சேர்ந்த நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 811 புள்ளிகள் பெற்று, ஒரு நிலை உயர்ந்து மீண்டும் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். முதலிடத்தில் இருந்த தென் ஆப்ரிக்கா வீராங்கனை லாரா உல்வார்ட் 806 புள்ளிகள் பெற்று, ஒரு நிலை சரிந்து 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இப்பட்டியலில், டாப் 10 இடங்களில் இடம் பிடித்த மற்றொரு இந்திய வீராங்கனையாக ஜெமிமா ரோட்ரிகஸ், 10வது இடத்தில் மாற்றமின்றி தொடர்கிறார். தவிர, ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லே கார்ட்னர் 3, இங்கிலாந்தின் நாட் சிவர்பிரன்ட் 4, ஆஸி அணியின் பெத் மூனி 5, ஆலிஸா ஹீலி 6, நியூசிலாந்தின் ஷோபி டிவைன் 7, ஆஸியின் எலிஸி பெரி 8, வெஸ்ட் இண்டீசின் ஹேலி மேத்யூஸ் 9வது இடங்களில் மாற்றமின்றி தொடர்கின்றனர்.
