ஆசிய கோப்பை யு-19 ஓடிஐ எதிரியை நைய புடை புதிய சாதனை படை; மலேசியாவை பந்தாடிய இந்தியா; 315 ரன் வித்தியாசத்தில் வெற்றி

துபாய்: ஆசிய கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நேற்று, இந்திய அணி, மலேசியாவை 315 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. துபாயில், 19 வயதுக்கு உட்பட்டோர் மோதும் ஆசிய கோப்பை ஒரு நாள் போட்டிகள் நடந்து வருகின்றன. ஏ பிரிவில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா-மலேசியா அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் ஆயுஷ் மாத்ரே, வைபவ் சூர்யவன்ஷி ஆடினர். ஆயுஷ் 14 ரன்களில் அவுட்டாக, வைபவ், 26 பந்தில் 50 ரன் குவித்து ஆட்டமிழந்தார். பின் வந்தோரில், வேதாந்த் திவாரி, 106 பந்துகளில் 90 ரன் குவித்தார். அவருடன் இணை சேர்ந்து ஆடிய விக்கெட் கீப்பர் அபிக்ஞான் குண்டு, 125 பந்துகளில் 209 ரன் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதனால், 50 ஓவர் முடிவில் இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு, 408 ரன் குவித்தது. பின், 409 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் மலேசியா களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் ஆஸிப் வாஜ்டி, முகம்மது ஹைரில் ரன் எடுக்காமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பின் வந்தோரில், ஹம்ஸா பாங்கி, அதிகபட்சமாக 35 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். அதனால், 32.1 ஓவரில் மலேசியா 93 ரன்னுக்கு சுருண்டது. அதனால், இந்தியா 315 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று அசத்தியது. இந்தியா தரப்பில் தமிழகத்தை சேர்ந்த தீபேஷ் தேவேந்திரன் துல்லியமாக பந்துகளை வீசி 5 விக்கெட்டுகளை சாய்த்து திணறடித்தார். உத்தவ் மோகன் 2 விக்கெட் எடுத்தார்.

* 209 நாட் அவுட் அடங்காத குண்டு
மலேசியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் இந்திய வீரர் அபிக்ஞான் குண்டு, 125 பந்துகளில் 209 ரன்களை குவித்து, நடப்பு தொடரின் உச்சபட்ச ரன் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதில், 9 சிக்சர், 17 பவுண்டரிகள் அடக்கம். நடப்பு தொடரில், இந்திய அணியின் மற்றொரு இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி 95 பந்துகளில் 171 ரன் குவித்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை, அபிக்ஞான் தற்போது முறியடித்துள்ளார். மேலும், யு-19 ஒரு நாள் போட்டிகளில், அதிக ரன் குவித்த இந்திய வீரராக திகழ்ந்த, அம்பதி ராயுடுவின் (177 ரன்) சாதனையும், தற்போது தகர்க்கப்பட்டுள்ளது. யு-19 போட்டிகளில், அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனை, உலகளவில், ஜிம்பாப்வே வீரர் வான் ஸ்கால்விக் (215 ரன்) வசம் உள்ளது.

Related Stories: