மும்பை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), நவம்பர் 2025-ஆம் ஆண்டின் சிறந்த மகளிர் வீராங்கனைக்கான விருதை இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷஃபாலி வர்மாவுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்திய மகளிர் அணி முதன்முறையாக வென்ற ICC மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் ஷஃபாலி வர்மா வெளிப்படுத்திய ஆல்-ரவுண்டர் ஆட்டத்திற்காக இந்த உயரிய கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
21 வயதான ஷஃபாலி வர்மா, காயம் காரணமாக விலகிய ப்ரத்திகா ராவலுக்குப் பதிலாக அணியில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவர் இறுதிப் போட்டியில் ஒரு அனுபவமிக்க வீரர் போல ஆதிக்கம் செலுத்தினார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், ஷஃபாலி 78 பந்துகளில் 87 ரன்களைக் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். இது, உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு இந்திய தொடக்க ஆட்டக்காரர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தது.
பந்துவீச்சிலும் இவரது பங்களிப்பு அபாரமாக இருந்தது. சுனே லூஸ் மற்றும் மரிசான் காப் ஆகியோரின் முக்கியமான பார்ட்னர்ஷிப்களை அடுத்தடுத்த ஓவர்களில் தகர்த்து, 7 ஓவர்களில் வெறும் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்தச் சிறப்பான ஆட்டத்திற்காக, உலகக் கோப்பையை இந்தியா வெல்ல வழிவகுத்த ‘ஆட்ட நாயகி’ (Player of the Match) விருதையும் ஷஃபாலி வர்மா பெற்றார். இந்த வெற்றியின் மூலம், உலகக் கோப்பையை வென்ற நான்காவது அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது.
இதே போல், நவம்பர் மாதத்திற்கான ஐசிசி ஆண்கள் மாதத்தின் சிறந்த வீரராக (ICC Men’s Player of the Month) தென்னாப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், ஹார்மர் அபாரமாகச் செயல்பட்டு தென்னாப்பிரிக்க அணிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தந்ததிற்காக இந்த உயரிய விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சைமன் ஹார்மர், நவம்பர் மாதம் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தனது சுழல் ஜாலத்தால் இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்ய ஹார்மர் முக்கியக் காரணமாக இருந்தார்.
2000ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்கா பெறும் முதல் டெஸ்ட் தொடர் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஹார்மர் மொத்தம் 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம், தொடரின் சிறந்த வீரர் விருதையும் (Player of the Series) அவர் தட்டிச் சென்றார்.
