சென்னை விமான நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னையில் இருந்து கொல்கத்தா சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இ-மெயிலில் மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சோதனைக்கு பிறகு வெறும் புரளி என்று கண்டுபிடிக்கப்பட்டு விமானம் 5 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள இண்டிகோ ஏர்லைன்ஸ் நிர்வாக அலுவலகத்திற்கு நேற்று காலை இ-மெயில் ஒன்று வந்தது. அதில் சென்னையில் இருந்து காலை கொல்கத்தா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. விமானம் நடுவானில் பறக்கும்போது வெடித்து சிதறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதேபோல் டெல்லியில் உள்ள இண்டிகோ ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்கும் இந்த மிரட்டல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஏர்லைன்ஸ் நிர்வாக அலுவலர்கள் விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு அவசர தகவல் அளித்தனர். இந்நிலையில் நேற்று காலை 8.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 168 பயணிகளுடன் புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. இதையடுத்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, பயணிகள் அனைவரையும் அவசர அவசரமாக விமானத்தில் இருந்து கீழே இறக்கி ஓய்வறையில் தங்க வைத்தனர்.

பின்னர் இழுவை வண்டிகள் மூலமாக விமானத்தை இழுத்துக் கொண்டு விமான நிலையத்தின் ஒதுக்குப்புறமான காலி இடத்தில் கொண்டு நிறுத்தப்பட்டது. இதற்கிடையே சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள் சிறப்பு ஆலோசனை கமிட்டி அவசர கூட்டம் நடந்தது. பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டுகளை கண்டறிவதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற மோப்ப நாய்களும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டன. விமானத்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக சோதனை நடத்தியும் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரிய வந்தது. இதையடுத்து பயணிகள் அனைவரும் மீண்டும் விமானத்தில் ஏற்றப்பட்டு, விமானம் 5 மணி நேரம் தாமதமாக சென்னையில் இருந்து பகல் 1.30 மணிக்கு கொல்கத்தாவுக்கு புறப்பட்டு சென்றது.
இது சம்பந்தமாக சென்னை விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, வெடிகுண்டு புரளியை கிளப்பிவிட்ட மர்ம நபர்கள் யார் என்று தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

The post சென்னை விமான நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: