கூடுவாஞ்சேரி பெட்ரோல் பங்க் வாசலில் பீர்பாட்டில் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து: டிரைவர் படுகாயம்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரியில் இன்று அதிகாலை பெட்ரோல் பங்க் வாசலில் பீர்பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில், லாரி இடிபாடுகளில் சிக்கி டிரைவர் படுகாயம் அடைந்தார். இதனால் லாரியில் இருந்த பீர்பாட்டில்கள் அனைத்தும் உடைந்து சிதறியதால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் பிச்சைமுத்து (49). லாரி டிரைவர்.

இவர், அம்மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் பார்களில் சேகரிகப்பட்ட காலி பீர்பாட்டில் மற்றும் மதுபாட்டில்களை லாரியில் ஏற்றிக்கொண்டு, நேற்றிரவு சென்னை பூந்தமல்லி நோக்கி வந்து கொண்டிருந்தார். இன்று அதிகாலை கூடுவாஞ்சேரி, ஜிஎஸ்டி சாலையில் பிச்சைமுத்து லாரியை ஓட்டி வந்துள்ளார். அப்போது டிரைவர் பிச்சைமுத்துவின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையை ஒட்டிய மின்வாரிய அலுவலகம் அருகே தனியார் பெட்ரோல் பங்க் நுழைவுவாயிலின் முன்பு தலைகுப்புற கவிழ்ந்தது.

இவ்விபத்தில் லாரிக்குள் இருந்த காலி பீர்பாட்டில் உள்பட அனைத்து மதுபாட்டில்களும் ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் சுக்குநூறாக உடைந்து சிதறியது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன நெரிசல் ஏற்பட்டது. இவ்விபத்தில், லாரியின் இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் பிச்சைமுத்து படுகாயங்களுடன் அலறி கூச்சலிட்டார். படுகாயம் அடைந்த டிரைவர் பிச்சைமுத்துவை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்ததும் பொத்தேரியில் உள்ள தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்தனர். அங்கு விபத்தில் தலைகுப்புற கவிழ்ந்த லாரியை கிரேன் உதவியால் அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.
இவ்விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.

The post கூடுவாஞ்சேரி பெட்ரோல் பங்க் வாசலில் பீர்பாட்டில் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து: டிரைவர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: