விவேகானந்தர் பாறைக்கு பாலம் கட்டும் பணியை எம்ஜிஆர் நிறுத்தினார் குமரி அனந்தன் அறிக்கை சிறப்புகளை நான் எடுத்துக்கூறியதால்

குடியாத்தம், ஜூன் 2: சிறப்புகளை நான் எடுத்துக்கூறியதால் தான் விவேகானந்தர் பாறைக்கு பாலம் கட்டும் பணியை எம்ஜிஆர் நிறுத்தினார் என்று குமரிஅனந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் எம்பியுமான குமரி அனந்தன் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காக்கா தோப்பு கிராமத்தில் உள்ள இயற்கை மற்றும் யோகா மருத்துவமனையில் வயது முதிர்வின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், நேற்று குமரி அனந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சியில் குமரி முனையில் கடலுக்குள் இருக்கும் விவேகானந்தர் பாறைக்குப் பாலம் அமைத்திட கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று பாலத்திற்கு இரும்புத்தளம் அமைத்து, பணியைத் தொடங்க எம்ஜிஆர் கன்னியாகுமரிக்கு வருகை தந்தார். அப்போது நான் எம்எல்ஏவாக இருந்த குமரி மாவட்டத்தைச் சார்ந்தவன் என்பதால் உடனிருந்தேன். அப்போது நான், அந்தப் பாறைக்கு செல்ல விவேகானந்தர் விரும்பியபோது படகுக்காரன் ஏற்றிச் செல்ல மறுத்தார். சிறிதும் தயங்காமல் தலைப்பாகையை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு கடற்பகுதியை நீந்தி பாறைக்கு சென்று தவமிருந்தார் சுவாமி விவேகானந்தர். அங்கிருந்து தான் சிக்காக்கோ போவதற்கும் முடிவெடுத்தார்.

மேலும் கல்கத்தாவிலிருந்து ராமகிருஷ்ணர் மடத்திற்கு படகு மூலமும், பாலம் வந்தபிறகு கார் மூலமும் சென்றபோது ஏற்பட்ட வரலாற்று சம்பவங்களையும் உணர்வுகளையும் எம்ஜிஆரிடம் எடுத்துரைத்தேன். ‘அப்படியா இங்கும் அதுபோல் உள்ளத்து உணர்ச்சி இல்லாமல் போகவேண்டாம்’ என பாலம் கட்டுவதை நிறுத்தி, படகு போக்குவரத்தே தொடரட்டும் என எம்ஜிஆர் முடிவெடுத்தார். இந்நிலையில், தற்போது பாரத பிரதமர் நரேந்திர மோடி விவேகானந்தர் மண்டபம் அமைந்துள்ள பாறைக்குச் செல்வதற்காக பூம்புகார் கப்பல் தளத்திற்குச் சென்று அங்கிருந்து தனிப்படகு மூலம் விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்றார் என்ற செய்தி வந்துள்ளது. இதன் தொடர்புடைய இந்த வரலாற்றுச் செய்தியைப் பகிர்ந்து கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

The post விவேகானந்தர் பாறைக்கு பாலம் கட்டும் பணியை எம்ஜிஆர் நிறுத்தினார் குமரி அனந்தன் அறிக்கை சிறப்புகளை நான் எடுத்துக்கூறியதால் appeared first on Dinakaran.

Related Stories: