சார் பதிவாளர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் போலீசார் திடீர் ரெய்டு கணக்கில் வராத ₹2.10 லட்சம் பறிமுதல் காட்பாடியில் நேற்றிரவு பரபரப்பு

வேலூர், ஜூன் 20: காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் போலீசார் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத ₹2.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் மாவட்டம், காட்பாடியில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு நாள்தோறும் நிலம் மற்றும் வீட்டுமனைகள் தொடர்பாக 100க்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனால், எப்போதும் சார் பதிவாளர் அலுவலகத்தில் கூட்டம் மிகுந்து காணப்படும். இந்நிலையில், சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு ஒரு சில அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக பல்வேறு புகார்கள் எழுந்தது. இதற்கிடையில், புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு மாற்றி கொடுத்தாக, காட்பாடி சார் பதிவாளர் அலுவலக உதவியாளர் சிவக்குமார், கடந்த சில நாட்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது பதிவுத்துறை ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், வேலூர் விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் நேற்றிரவு 7.30 மணியளவில் அதிரடியாக காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். பின்னர் அவர்கள், நுழைவு வாயில் வெளிப்புற கதவு மற்றும் அலுவலக கதவு போன்றவைகளை இழுத்து மூடி பூட்டினர். இதனால் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள், ஊழியர்கள், பத்திரப்பதிவு முகவர்கள் மற்றும் பத்திர பதிவு செய்ய வந்த நபர்கள் உட்பட பலர் வெளியே வரமுடியாமல் சிக்கிக் கொண்டனர். தொடர்ந்து விஜிலென்ஸ் போலீசார் அலுவலகம் முழுவதும் உள்ள அறைகளில் அங்குலம் அங்குலமாக பணம் ஏதேனும் உள்ளதா? முறைகேடான ஆவணங்கள் உள்ளதா? நேற்று எத்தனை பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டது? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

மேலும் சார் பதிவாளர் அலுவலகம் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் ஏதேனும் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் அதிரடியாக சோதனை நடத்தினர். இதற்கிடையில், மழை காரணமாக காட்பாடி பகுதியில் மின் தடைபட்டது. இதனால் சார் பதிவாளர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் போலீசாரின் சோதனையில் தொய்வு ஏற்பட்டது. பின்னர், மின்சாரம் வந்த பிறகு போலீசார் நடத்திய சோதனையில், அலுவலகத்தின் பல்வேறு இடங்களில் கணக்கில் வராத ₹2.14 லட்சத்தை கண்டுபிடித்து பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பத்திரப்பதிவு அதிகாரிகள் மற்றும் உள்ளிருந்த நபர்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தினர். இச்சம்பவம் காட்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post சார் பதிவாளர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் போலீசார் திடீர் ரெய்டு கணக்கில் வராத ₹2.10 லட்சம் பறிமுதல் காட்பாடியில் நேற்றிரவு பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: