மைசூரில் திருடப்பட்ட 7 லேப்டாப், 2 செல்போன் பறிமுதல் தலைமறைவானவருக்கு வலை பேரணாம்பட்டு அருகே வீட்டில் சிக்கியது

 

பேரணாம்பட்டு, மே 29: மைசூரில் திருடப்பட்ட 7 லேப்டாப்கள் மற்றும் 2 செல்போன்கள் பேரணாம்பட்டு அருகே வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இதுதொடர்பாக தலைமறைவாக உள்ளவரை போலீசார் தேடிவருகின்றனர். கர்நாடகா மாநிலம், மைசூர் எப்பால் காவல் நிலையத்தில் கடந்த 27ம் தேதி ஒரே நாளில் 7 லேப்டாப்கள் மற்றும் 2 செல்போன்கள் திருட்டு போனதாக புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும், திருடு போன செல்போனின் சிக்னலை வைத்து, அவை எங்குள்ளது என தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த சங்கராபுரம் கிராமத்தில் அவை இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மைசூரில் இருந்து விரைந்து வந்த தனிப்படை போலீசார் நேற்று மேல்பட்டி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் குப்பன் மற்றும் போலீசார் செல்போன் சிக்னல் காட்டிய சங்கராபுரம் கிராமத்தில் உள்ள ராஜேந்திரன் என்பவரது வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, மைசூர் பகுதிகளில் திருடப்பட்ட 7 லேப்டாப்கள் மற்றும் 2 செல்போன்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ₹8 லட்சம் என கூறப்படுகிறது. இதையடுத்து மைசூர் தனிப்படை போலீசார் அந்த லேப்டாப்கள் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். தொடர்ந்து, இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய ராஜேந்திரனை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

The post மைசூரில் திருடப்பட்ட 7 லேப்டாப், 2 செல்போன் பறிமுதல் தலைமறைவானவருக்கு வலை பேரணாம்பட்டு அருகே வீட்டில் சிக்கியது appeared first on Dinakaran.

Related Stories: