மஞ்சூர்-கோவை சாலையில் குட்டிகளுடன் நடமாடும் 5 காட்டு யானைகள்

*வாகனங்களை வழிமறித்ததால் பரபரப்பு

மஞ்சூர் : மஞ்சூர்-கோவை சாலையில் குட்டிகளுடன் உலா வரும் 5 காட்டு யானைகள் அரசு பஸ்கள், தனியார் வாகனங்களை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள இப்பகுதியில் நீர் மின் நிலையம் மற்றும் குடியிருப்புகள் உள்ளன.

இப்பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் கோடை காலம் துவங்கியபோது உணவு மற்றும் குடிநீர் தேடி வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்றன. இதனால் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கெத்தை பகுதியில் யானைகளின் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இவ்வழியாக இயக்கப்பட்ட அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் சென்று வந்தது.

இந்நிலையில் காட்டு யானைகள் மீண்டும் கெத்தை பகுதிக்கு திரும்பியுள்ளன. கடந்த சில தினங்களாக 2 குட்டிகளுடன் 3 பெரிய யானைகள் மந்து, கெத்தை, பெரும்பள்ளம் பகுதிகளில் நடமாடி வருகின்றன. பெரும்பாலும் சாலைகளிலேயே யானைகள் நடமாடி வருவதால் அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் யானைகளின் வழிமறிப்பில் சிக்கி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மஞ்சூர்-கோவை சாலையில் அடிக்கடி போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் மாலை கோவையில் இருந்து தனியார் வாகனங்களில் பயணிகள் ஏராளமானோர் மஞ்சூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்கள். அப்போது கெத்தை அருகே குட்டிகளுடன் காட்டு யானைகள் வழியை மறித்தபடி நடுரோட்டில் நின்று கொண்டிருந்தன. யானைகளை கண்ட பயணிகள் தங்களது வாகனங்களை சற்று தொலைவாக சாலையோரம் ஒதுக்கி நிறுத்தினர். இதேபோல் மஞ்சூரில் இருந்து கோவைக்கு சென்ற வாகனங்களும் காட்டு யானைகளின் வழிமறிப்பில் சிக்கின.

குட்டிகளுடன் இருந்த யானைகள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக வழிவிடாமல் சாலையிலேயே நடமாடியதால் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. மாலை சுமார் 6 மணியளவில் மஞ்சூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கோவைக்கு அரசு பஸ் சென்றது. சம்பவ இடத்தில் காட்டு யானைகளை கண்டவுடன் ஓட்டுனர் பஸ்சை மெதுவாக இயக்கினார். பஸ்சை கண்டவுடன் யானைகள் முன்னோக்கி நகர்ந்து வழிவிடுவதுபோல் சாலையோரமாக ஒதுங்கி நின்றது.

இதைததொடர்ந்து அரசு பஸ்சை பின்தொடர்ந்து அனைத்து வாகனங்களும் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. 3 பெரிய யானைகளுடன் 2 குட்டிகள் உள்ள கூட்டத்தில் ஒரு குட்டி யானை மிகவும் சுட்டியாக உள்ளதால் வாகனங்களை கண்டவுடன் சற்று தூரம் பிளிறியபடி விரட்டுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் வனத்துறையினர் மஞ்சூர்-கோவை சாலையில் மந்து, கெத்தை, பெரும்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது குறித்து ரேஞ்சர் சீனிவாசன் கூறியதாவது: கெத்தை பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். சாலையில் யானைகளின் நடமாட்டம் தென்பட்டால் அவ்வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்திவைத்து யானைகள் காட்டிற்குள் சென்ற பிறகே வாகனங்களை மேற்கொண்டு செல்ல அறிவுறுத்தப்படுகிறது. காட்டு யானைகளை கண்டவுடன் ஓட்டுனர்கள் தங்களது வாகனங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும்.

பயணிகள் கீழே இறங்கி யானைகளை கண்டு கூச்சலிடுவது மற்றும் புகைப்படம் எடுக்க முயற்சி செய்யக்கூடாது. வாகனங்கள் மூலம் யானைகளை பின் தொடர்தல், அவற்றை விரட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. காட்டு யானைகள் சாலையில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றதை உறுதி செய்த பின்னரே வாகனங்களை இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post மஞ்சூர்-கோவை சாலையில் குட்டிகளுடன் நடமாடும் 5 காட்டு யானைகள் appeared first on Dinakaran.

Related Stories: