இரும்புத் தூண்கள் அமைக்கும் பணி தீவிரம்; பாம்பன் வழியாக கப்பல்கள் செல்ல தடை

ராமேஸ்வரம்: பாம்பன் கடல் கால்வாயில் தூக்குப்பாலத்திற்காக இரும்புத் தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், பாம்பன் வழியாக கப்பல்கள், பெரிய படகுகள் கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே, பாம்பன் கடலில் ரூ.535 கோடி செலவில் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பகுதியில், தற்போது செங்குத்து தூக்குப்பாலம் நிறுவும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கடல் கால்வாயில் செங்குத்து தூக்குப்பாலம் அமைப்பது இதுவே முதன்முறையாகும். இதற்கான பாகங்கள் பொருத்தும் பணி நிறைவு பெற்று, ஆபரேட்டிங் கட்டிடம் வரை தூக்குப்பாலம் நகர்த்தப்பட்டு இரும்புத் தூண்களில் பொருத்த தயாராக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கப்பல்கள் கடந்து செல்லும் தூக்குப்பாலம் கால்வாயில் நேற்று தற்காலிக இரும்புத் தூண்கள் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக கால்வாயில் ராட்சத இரும்பு மிதவையில் கிரேன் பொருத்தி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தூக்குப்பாலம் கால்வாயில் கப்பல்கள், பெரிய படகுகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, காக்கிநாடா, விசாகப்பட்டினம், கொல்கத்தா ஆகிய வடக்குப் பகுதி துறைமுகங்களில் இருந்து தூத்துக்குடி, கன்னியாகுமாரி துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களும், குஜராத், மும்பை, கோவா, கேரளா ஆகிய மேற்குபகுதி துறைமுகங்களுக்கு செல்லும் சிறிய ரக கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கால்வாய் வழித்தடத்தை பயன்படுத்த முடியாது என ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post இரும்புத் தூண்கள் அமைக்கும் பணி தீவிரம்; பாம்பன் வழியாக கப்பல்கள் செல்ல தடை appeared first on Dinakaran.

Related Stories: