லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் பாய்ந்து பெண் டாக்டர் பலி: அயனாவரம் விடுதியில் சோகம்

பெரம்பூர்: நாமக்கல் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்தவர் சரனிதா (32). இவர் மருத்துவம் படித்துவிட்டு மேல் படிப்புக்காக சென்னை அயனாவரத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் உதயகுமார். இவர்களுக்கு 5 வயதில் குழந்தை உள்ளது. கோயம்புத்தூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் உதயகுமார் டாக்டராக உள்ளார். அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தங்கியிருந்து சரனிதா படித்து வந்தார். நேற்றுகாலை உதயகுமார் பலமுறை தனது மனைவி செல்போனுக்கு தொடர்புகொண்டபோது போன் எடுக்கவில்லை என்றதும் பதற்றம் அடைந்தார். இதையடுத்து விடுதியில் உள்ள அலுவலகத்துக்கு போன் செய்து தகவல் கொடுத்து தனது மனைவியிடம் சென்று போன் பேசும்படி கூறியுள்ளார்.

இதையடுத்து விடுதி ஊழியர்கள் மற்றும் துப்புரவு ஊழியர் கமலா ஆகியோர் சென்று பார்த்தபோது சரனிதா வாயில் ரத்தத்துடன் மயங்கி கிடப்பது பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அயனாவரம் இன்ஸ்பெக்டர் பரணிநாதன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தபோது டாக்டர் சரனிதா மின்சாரம் பாய்ந்து உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரது உறவினர் நடராஜன் என்பவரை வரவழைத்து விசாரித்துவிட்டு பின்னர் சரனிதா உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். டாக்டரின் கையில் மின்சாரம் பாய்ந்ததற்கான அடையாளம் உள்ளன. லேப்டாப்பில் சார்ஜ் போடும்போது சார்ஜ் வயர் லேசாக கிழிந்து இருந்துள்ளது. அதன் வழியாக மின்சாரம் பாய்ந்து சரனிதா உயிரிழந்துள்ளார் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அயனாவரம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

The post லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் பாய்ந்து பெண் டாக்டர் பலி: அயனாவரம் விடுதியில் சோகம் appeared first on Dinakaran.

Related Stories: