கோடை விடுமுறையையொட்டி ஆழியாரில் குவிந்த சுற்றுலா பயணிகள்; 2 நாட்களில் 10 ஆயிரம் பேர் வருகை

*போலீசார் கண்காணிப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த ஆழியாரில் பள்ளி கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. இரு நாட்களில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். இதனால் போலீசார் கண்காணிப்பில் தொடர்ந்து ஈடுபட்டனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த சுற்றுலா பகுதியான ஆழியாருக்கு கோவை சுற்று வட்டார பகுதியிலிருந்தும் திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், பழனி, கேரளா உள்பட வெளியூர்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தை விட அதிகளவில் இருக்கும்.

ஆழியாருக்கு வரும் பயணிகள் அணையின் நீர்த்தேக்க பகுதியை பார்வையிட்டு பின், பூங்காவில் சென்று குடும்பத்துடன் பொழுதை கழிக்கின்றனர். மேலும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். இதில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை, வெயிலின் தாக்கம் அதிகம் காரணமாக ஆழியாருக்கு சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாக இருந்தது. பயணிகள் வருகை குறைவால், அணையில் அவ்வப்போது படகு சவாரியும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதியிலிருந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறையால், கடந்த ஒரு மாதமாக ஆழியாருக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. இந்த மாதம் துவக்கத்தில் கடுமையான கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்திருந்தனர். இந்நிலையில், இரண்டு வாரத்துக்கு முன்பிருந்து பல நாட்களாக தொடர்ந்து பெய்த கோடை மழையால் ஆழியார் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளில் சீதோஷன நிலையில் மாற்றம் ஏற்பட்டது. மேலும், வெயிலின் தாக்கம் குறைந்து ரம்மியமாக இருப்பதால், சீதோஷன நிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்க துவங்கியது.

அதிலும், கடந்த சில நாட்களாக ஆழியாருக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இதில் வெளியூர் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்துள்ளது. நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால், ஆழியாருக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் வெகு நேரம் நின்று டிக்கெட் எடுத்து சென்றனர். மேலும், ஆழியாருக்கு வந்த சுற்றுலா பயணிகள் பலரும், அணையை தொட்டுள்ள பூங்காவில் வெகுநேரம் பொழுதை கழித்தனர்.

அதிலும், பூங்கா வழியாக செல்லும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் வெகு நேரம் குளித்து மகிழ்ந்தனர். ஆழியாரில் நேற்று ஒரே நாளில் சுமார் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் குவிந்தனர். கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால், போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இது குறித்து பொதுப்பணித்துறையினர் கூறுகையில்,
‘‘தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் கடந்த சில வாரங்களாக ஆழியாருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

தொடர்ந்து, இம்மாதம் இறுதி வரை சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதிலும், தற்போது வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. மழைக்காரணமாக சீதோஷன நிலையில் மாற்றத்தால் இந்த மாதம் நிறைவடைவதற்குள், கடந்த ஆண்டு கோடை விடுமுறையை விட இந்த ஆண்டில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது’’ என்றனர்.

The post கோடை விடுமுறையையொட்டி ஆழியாரில் குவிந்த சுற்றுலா பயணிகள்; 2 நாட்களில் 10 ஆயிரம் பேர் வருகை appeared first on Dinakaran.

Related Stories: