தாமிரபரணி ஆற்றுப்பாலம் அருகே நெல்லை சந்திப்பில் தடுப்பு சுவர்களை உடைத்து புதிய வழிப்பாதை அமைப்பு

*வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

நெல்லை : நெல்லை தாமிரபரணி ஆற்றுப்பாலம் அருகே தடுப்பு சுவர்களை உடைத்து புதிய வாகன பாதை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை மாநகரில் நடந்துவரும் சாலை விரிவாக்க பணிகளால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. அதிலும் வண்ணார்பேட்டை தெற்கு மற்றும் வடக்கு பைபாஸ் சாலைகளில் மாலை வேளைகளில் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கின்றன. பைபாஸ் சாலைகளில் பேரிகார்டுகளும், சிமென்ட் ஸ்லாப்புகளும் இரு தினங்களுக்கு ஒருமுறை இடம் மாறி கொண்டே செல்வதால், பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் மாற்றுவழிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

நெல்லை சந்திப்பு அண்ணாசிலை அருகேயும் கடும் போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது. பாளையங்கோட்டையில் இருந்து செல்லும் வாகனங்கள், டவுனில் இருந்து வரும் வாகனங்கள், நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து வெளியேறும் வாகனங்களால் அங்கு போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது.

அப்பகுதியில் ஏதாவது ஒரு ரவுண்டானா அமைத்து சிக்னல் மூலம் வாகனங்கள் சிரமமின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நெல்லை சந்திப்பு தேவர் சிலையை ஒட்டி இரு சாலைகளையும் பிரிக்கும் தடுப்பு சுவர்களை உடைத்து ஒரு புதிய வழிப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாகன ஒட்டிகள் மத்தியில் இப்பாதை புழக்கத்திற்கு வரவில்லை என்றாலும், தடுப்பு சுவர்களை அகற்றியிருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் சந்தேகத்தை கிளப்பி வருகிறது. அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கடையில் இருந்து இலகு ரக வாகனங்கள் எளிதில் செல்ல வசதியாக புதிய பாதை அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘நெல்லை சந்திப்பில் அண்ணாசிலை யை தாண்டியுள்ள பகுதிகளில் உள்ள வாகனங்கள் டவுன் செல்ல வேண்டும் எனில், கொக்கிரகுளம் வந்து சுற்றியே செல்ல வேண்டியதுள்ளது. குறிப்பாக பூ மார்க்கெட் பகுதியில் உள்ள இலகுரக வாகனங்கள், பைக்குகள் டவுன் செல்ல கொக்கிரகுளத்திற்கு வந்து சுற்றுகின்றன. அதை தடுக்கவே தேவர் சிலைக்கு அடுத்தாற்போல் பேரிகார்டுகளையும், தடுப்பு சுவர்களையும் அகற்றி புதிய பாதை உருவாக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

நெல்லையில் தேவர் சிலையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள புதிய வழிப்பாதையை இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என போக்குவரத்து காவல்துறை சார்பில் இன்னமும் எவ்வித அறிவிப்பும் இல்லை. மேலும் வாகனங்கள் அப்பகுதியில் திடீரென இடது புறமாக திரும்பும்போது விபத்துக்கள் ஏற்படும் அபாயங்களும் உள்ளன.

அடிக்கடி எழும் சர்ச்சைகள்

நெல்லை சந்திப்பில் தேவர் சிலையை அருகே காணப்படும் தனியார் கண்மருத்துவமனை பகுதியில் அடிக்கடி போக்குவரத்து தொடர்பான சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் இருந்த பேருந்து நிறுத்தத்தை போக்குவரத்து போலீசார் அகற்றினர். டவுனில் இருந்து பஸ்கள் ஸ்ரீபுரத்திற்கு அடுத்தாற்போல், கொக்கிரகுளத்தில் நிற்கும் என்ற நிலை காணப்பட்டது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் அதிகளவில் விமர்சனங்கள் எழுந்தன. பின்னர் தனியார் கண் மருத்துவமனை அருகே போக்குவரத்து நிறுத்தம் மீண்டும் தரப்பட்டது. தற்போது மீண்டும் மருத்துவமனை எதிரில் இலகுரக வாகனங்கள் மட்டுமே செல்ல அறிவிப்பின்றி பாதை அமைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பி வருகிறது.

பரீட்சார்த்த முறையில் சோதனை

இதுகுறித்து நெல்லை மாவட்ட சாலை பாதுகாப்பு குழும அலுவலர்கள் கூறுகையில், ‘‘நெல்லை மாநகரில் மொத்தம் 15 இடங்களில் சாலை விரிவாக்கம், புதிய ரவுன்டானா அமைத்தல், புதிய சிக்னல்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடத்தப்பட உள்ளன. நெல்லை சந்திப்பு தனியார் கண் மருத்துவமனை எதிரேயும் பரீட்சார்த்த அடிப்படையில் பைக் மற்றும் கார் செல்ல வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. மாநகரின் போக்குவரத்தை மேம்பாட்டை உயர்த்தவே இம்முறையை மேற்கொள்கிறோம். அடுத்து வரும் நாட்களில் இதுகுறித்து உரிய முடிவுகள் எட்டப்படும்’’ என்றனர்.

The post தாமிரபரணி ஆற்றுப்பாலம் அருகே நெல்லை சந்திப்பில் தடுப்பு சுவர்களை உடைத்து புதிய வழிப்பாதை அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: