கன்னியாகுமரி – நாகர்கோவில் சாலையில் ராட்சத பள்ளத்தால் வாகனங்கள் சிக்கி திணறல்

*போக்குவரத்து நெரிசல்

நாகர்கோவில்: நாகர்கோவில் – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், நாகர்கோவில் ஈத்தாமொழி விலக்கில் இருந்து கரியமாணிக்கபுரம் வரையிலான சாலை குண்டும், குழியுமாக மிக மோசமாக உள்ளது. நாகர்கோவில் கோட்டார் சாலையில் உள்ள மிகப்பெரிய பள்ளத்தால், வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. மழை பெய்யும் சமயத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த பள்ளத்தில் பைக்குகள் மட்டுமின்றி கனரக வாகனங்களுமே தடுமாறி தான் செல்கின்றன. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் கன்னியாகுமரி, சுசீந்திரத்துக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இவ்வாறு சுற்றுலா வருபவர்கள், கன்னியாகுமரியில் இருந்து பத்மநாபபுரம், திருவனந்தபுரம் செல்ல இந்த சாலையை தான் பயன்படுத்துகிறார்கள். மிக முக்கியமான தேசிய நெடுஞ்சாலை இவ்வாறு மோசமாக கிடப்பது, உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளியூரில் இருந்து வருபவர்களையும் கவலை அடைய செய்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன், மேயர் மகேஷ் இந்த சாலை வழியாக வந்த போது பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அதிகாரிகளை தொடர்பு கொண்ட அவர், இந்த பகுதியில் உள்ள ராட்சத குண்டு, குழிகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் நேற்று காலையில் உடைந்த ஓடுகள், வீடுகளில் இருந்து இடிக்கப்பட்ட கழிவு மண் ஆகியவற்றை இந்த பள்ளத்தில் சிலர் கொட்டி சென்றனர். ஆனால் இதுவும் தற்காலிக தீர்வாக தான் இருந்தது. மழை பெய்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எந்த பலனையும் தராது.

உடனடியாக ஜல்லி கலவை, தார் கொண்டு வந்து சாலையை சீரமைக்க வேண்டும். மழை காலத்தில் சாலையில் அரிப்பு ஏற்படுவதால், இந்த பகுதியில் மட்டும் கான்கிரீட் போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். நெடுஞ்சாலைத்துறை இதை கவனிக்குமா? என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்த ராட்சத பள்ளத்தால், கோட்டார் சாலையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்கும் நிலை உள்ளது. நேற்று முகூர்த்த நாள் என்பதுடன், விடுமுறை தினமும் என்பதால், கோட்டார் சாலையில் அதிகளவில் வாகன போக்குவரத்து இருந்தது. சாலையில் உள்ள பள்ளத்தால் ஏற்பட்ட நெரிசல் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

The post கன்னியாகுமரி – நாகர்கோவில் சாலையில் ராட்சத பள்ளத்தால் வாகனங்கள் சிக்கி திணறல் appeared first on Dinakaran.

Related Stories: