வங்க கடலில் உருவான ரெமல் புயலால் மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்

 

சென்னை, மே 27: வங்ககடலில் உருவான, ‘ரெமல்’ புயல் எதிரொலியால், மாமல்லபுரத்தில் கடலில் பலத்த சீற்றம் காணப்பட்டு வருகிறது. மத்தியகிழக்கு வங்ககடலில் உருவான, காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ‘ரெமல்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது மேற்குவங்க மாநிலம் கேனிங்கிலிருந்து 390 கிமீ தூரத்தில் நிலை கொண்டிருப்பதாகவும், நேற்று இரவோ அல்லது இன்று அதிகாலையோ வங்காள விரிகுடா மற்றும் அதன் முக்கிய பகுதிகளான சாகர் தீவு – கோபுபுரா இடையே கரையை கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல், 12 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், கரையை கடக்கும் போது மணிக்கு 130 முதல் 135 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ‘ரெமல்’ புயல் எதிரொலி காரணமாக, மாமல்லபுரம், வெண்புருஷம், கொக்கிலமேடு, தேவனேரி, புதிய எடையூர் குப்பம், சலவான்குப்பம், பட்டிப்புலம் குப்பம், சூளேரிக்காடு, நெம்மேலி, புதிய கல்பாக்கம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் 5 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பி, பல மீட்டர் தூரம் முன்னோக்கி வந்து, கடற்கரை பகுதியை சூழ்ந்து, கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

பலத்த கடல் சீற்றத்தால், வழக்கமாக கடற்கரையில் நடைபயிற்சி செய்பவர்கள், நடைபயிற்சி மேற்கொள்ளாமல் வேடிக்கை பார்த்தனர். மேலும், நேற்று காலை கடலில் குளிக்கலாம் என உற்சாகத்துடன வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை காணமுடிந்தது. இந்த கடல் சீற்றத்தால், மீனவர்கள், படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை பாதுகாப்பாக வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

The post வங்க கடலில் உருவான ரெமல் புயலால் மாமல்லபுரத்தில் கடல் சீற்றம் appeared first on Dinakaran.

Related Stories: