சலுகை விலை அறிவிப்பால் துணிக்கடையில் தள்ளுமுள்ளு: உரிமையாளருக்கு போலீசார் எச்சரிக்கை

 

பல்லாவரம், மே 27: துணிக்கடையில் சலுகை விலை அறிவிப்பால், வாடிக்கையாளர்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கடைக்காரரை எச்சரித்த போலீசார், விற்பனையை நிறுத்தினர். பல்லாவரத்தில் இருந்து பம்மல் செல்லும் பிரதான சாலையில் ஆண்களுக்கான ஆடை விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்றுமுன்தினம் மாலை 5 மணி முதல் இரவு 10 மணிவரை திடீரென ரூ.5க்கு டீ-ஷர்ட் மற்றும் ரூ.50க்கு சட்டை சலுகை விலையில் வழங்கப்படும் என்று அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.

இதனைப் பார்த்ததும் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ஏராளமானோர் ஒரே நேரத்தில் முண்டியடித்துக் கொண்டு அந்த கடையின் முன்பு திரண்டு துணிகளை வாங்க ஆர்வம் காட்டியதால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் பல்லாவரம்-பம்மல் பிரதான சாலையில் மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் அனைத்தும் ஆங்காங்கே சாலையில் தேங்கி நின்றன.

தகவலறிந்து வந்த பல்லாவரம்போலீசார், கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றனர். ஒரு கட்டத்தில் கூட்டம் அதிகரித்துக் கொண்டு செல்லவே, செய்வதறியாது தவித்த போலீசார், சாலையில் தற்காலிக இரும்பு தடுப்புகளை அமைத்து, கூட்டத்தை வரிசையில் வருமாறு ஒழுங்கு படுத்தினர். இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த வாகனங்கள் ஒரு வழியாக மெதுவாக நகரத் தொடங்கியது.

ஒரு வழியாக வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட்டபடி அங்கிருந்து கடந்து சென்றனர். இருந்த போதிலும் நேரம் செல்லச் செல்ல கூட்டம் கட்டுக்கடங்காமல் போகவே, போலீசார் விற்பனையை உடனடியாக நிறுத்தக்கோரி கடையின் உரிமையாளரை எச்சரித்தனர். இதனால் குறைந்த விலைக்கு சட்டை வாங்கலாம் என்று ஆர்வமுடன் வந்த வாடிக்கையாளர்களில் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

The post சலுகை விலை அறிவிப்பால் துணிக்கடையில் தள்ளுமுள்ளு: உரிமையாளருக்கு போலீசார் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: