மோடி தெய்வ மகன் கிடையாது டெஸ்ட் டியூப் பேபி: நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் தாக்கு

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. விழாவிற்கு கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர்கள் சிந்தனை செல்வன், துரை. ரவிக்குமார் ராஜ்குமார், முதன்மை செயலாளர் ஏ.சி.பாவரசு, எம்எல்ஏக்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர்பாபு முன்னிலை வகித்தனர். விழாவில், திருமாவளவன் பேசுகையில், ‘‘தேர்தலில் சில கட்சிகள் வெற்றியும், தோல்வியும் அடையும்.

ஆனால், மாற்றம் ஏற்பட வேண்டும். ஜூன் 4ம் தேதிக்கு பிறகு ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்படும் பா.ஜனதாவை மீண்டும் வரவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே, நாம் கவனமாக இருக்க வேண்டும். தேர்தல் வெற்றி, தோல்வி ஒரு பெரிய விஷயமல்ல. கருத்தியல் அடிப்படையில் பகையாளிகளை வீழ்த்துவது மிகவும் முக்கியமானது. அதற்கான சக்திகளை ஒருங்கிணைத்து இயங்கி வருகிறோம்” என்றார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் பேசுகையில், ‘உடம்புக்கு ஒரு காயம் ஏற்பட்டால் அது காணாமல் போய்விடும். ஆனால், ஒரு சமுதாயத்துக்கோ, ஒரு நாட்டுக்கோ காயம் ஏற்பட்டால் அதைப் பற்றி நாம் பேசாமல் இருந்தால் அந்த காயம் இன்னமும் அதிகமாகிவிடும். எங்களைப் போன்ற ஒரு கலைஞனை மேடையேற்றிய மக்களுக்கு ஒரு பிரச்னை ஏற்படும்போது அதைப் பார்த்துக் கொண்டு கோழையாக இருந்து விட்டால் அந்த சமுதாயமே கோழையாகி விடும். நான் செய்து கொண்டிருப்பது வேலை இல்லை. அது என்னுடைய கடமை.

ஒரு குரலை ஒடுக்க வேண்டுமென்று நினைத்தால் அதைவிட ஆழமான குரல் எதிரொலிக்கும் என்பதாலேயே கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து பேசி வருகிறேன். தன்னை தெய்வ மகன் என்று ஒருவர் (மோடி) சொல்லிக் கொள்கிறார். அவர் தெய்வமகன் அல்ல; டெஸ்டியூப் பேபி ஆவார்.

மன்னரை பார்த்து பயப்படுபவன் நான் அல்ல. எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும்‘ என்றார். விழாவில் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, மாநில அமைப்பு செயலாளர் ஆர்.பன்னீர்தாஸ், 190வது வட்டச் செயலாளர் சிட்டு (எ) ஆமோஸ், செங்கல்பட்டு மேற்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பொன்னிவளவன் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

The post மோடி தெய்வ மகன் கிடையாது டெஸ்ட் டியூப் பேபி: நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: