வேலை ஆசை காட்டி 5 ஆயிரம் பேரை கடத்திய கும்பல்: கம்போடியாவில் சிக்கிய 60 இந்தியர்கள் மீட்பு

திருமலை: கம்போடியாவில் சிக்கிய 5 ஆயிரம் இந்திய இளைஞர்களில் முதற்கட்டமாக 60 பேரை தூதரக அதிகாரிகள் மீட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர். கம்போடியாவில் வேலை வாய்ப்பு பயிற்சி தருவதாக கூறி இந்தியாவில் இருந்து தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்கள் மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை தனியார் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு ஆசைவார்த்தைக்கூறி அழைத்துச்சென்றுள்ளது. ஆனால் அங்கு இணையதள மோசடி, வங்கி கணக்குகளை ஹேக் செய்து பணம் அபகரிப்பது போன்ற பயிற்சி அளித்துள்ளனர்.

இதையறிந்து அதிர்ச்சியடைந்த இந்திய இளைஞர்கள் உடனடியாக தங்களை மீட்கும்படி இந்தியாவில் உள்ள தங்களது பெற்றோருக்கு தெரிவித்தனர். மேலும் கம்போடியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளையும் நாடினர். அதன்பேரில் முதற்கட்டமாக தமிழகம், ஆந்திரா உட்பட பல மாநிலங்களை சேர்ந்த 60 இந்திய இளைஞர்களை அனுப்ப கம்போடியா அரசு ஏற்பாடு செய்தது. நாடு திரும்ப விரும்பிய இந்திய இளைஞர்களின் பெயர்களை இந்திய தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் விவரங்களை வெளியிட்டது. இதையடுத்து கம்போடியாவில் உள்ள சிஹானுக்வில்லே ஆணைய ஒத்துழைப்புடன் 60 பேர் மீட்கப்பட்டு நேற்றுமுன்தினம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள இளைஞர்களை மீட்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

The post வேலை ஆசை காட்டி 5 ஆயிரம் பேரை கடத்திய கும்பல்: கம்போடியாவில் சிக்கிய 60 இந்தியர்கள் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: