சென்னை பழைய சட்டக்கல்லூரி அருகே குற்றவியல் நீதிமன்றங்களுக்கான 5 மாடி கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்ட தடையில்லை: இன்று நடக்க இருந்த விழாவை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை பழைய சட்டக் கல்லூரி அருகில் ஐந்து மாடி கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்த அனுமதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை பாரிமுனையில் உள்ள பழைய சட்டக் கல்லூரி வளாகத்தில் குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற அறைகள், நீதிபதிகள் அறைகள் உள்ளிட்டவை அடங்கிய ஐந்து மாடி கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற உள்ளது. விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள்.

இந்நிலையில், கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டி.மோகன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.பி.பாலாஜி அமர்வில் நேற்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஸ்வரன், புராதன கட்டிடமான இங்கு மாஸ்டர் பிளான் ஏதுமில்லாமல் கட்டுமானங்கள் மேற்கொள்ளக் கூடாது.

உயர் நீதிமன்ற வளாகத்தில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து மாஸ்டர் பிளான் வகுக்குமாறு உத்தரவிட வேண்டும். மாஸ்டர் பிளான் வகுக்கும் வரை ஐந்து மாடி கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தரப்பில் ஆஜரான தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், பழைய சட்டக் கல்லூரியை இடிக்கப் போவதில்லை. அதன் அருகில் தான் ஐந்து மாடி கட்டிடம் அமையப் போகிறது என்றும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கட்டுமானங்கள் மேற்கொள்வதற்கு தேவையான அனுமதிகள் பெறப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல் அடிக்கல் நாட்டுவதற்கு எந்த அனுமதியும் பெற தேவையில்லை. ஐந்து மாடி கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் மோகன் அளித்த விண்ணப்பத்தை சென்னை உயர் நீதிமன்ற கட்டிடக் குழு ஆய்வு செய்தது. அந்த கூட்டத்தில், புதிய நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. புதிய குழுவின் அறிக்கை அடிப்படையில் முடிவெடுத்த பிறகே கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். அதற்கு முன் எந்த கட்டுமான பணிகளும் தொடங்கப்படாது என்று தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற நிர்வாக பிரிவு பதிவாளர் தரப்பில் ஆஜரான ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ஒன்றிய, மாநில அரசுகள் தவிர வேறு எவரும் கட்டுமானங்கள் மேற்கொள்வதாக இருந்தால் தான் முன் அனுமதி தேவை என்று தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்ற கட்டிடக் குழுவின் கூட்ட முடிவுகளை பதிவு செய்து 5 மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடத்தலாம் என்று அனுமதியளித்து உத்தரவிட்டனர். சட்டக் கல்லூரி வளாகத்தில் இருந்த இரு சமாதிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல் முறையீட்டு வழக்குடன் இந்த வழக்கையும் சேர்த்து பட்டியலிட வேண்டும் என்று பதிவுத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

* அனைத்து மத முறைப்படியா?
உயர் நீதிமன்ற வளாகத்தில் 5 மாடி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவை இந்து மத முறைப்படி மட்டுமல்லாமல், அனைத்து மத முறைப்படி நடத்த உத்தரவிட வேண்டும் என்று திராவிடர் கழகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் முரளி சேகர் நீதிபதிகளிடம் முறையீடு செய்தார். இதை கேட்ட நீதிபதிகள், இது ஒரு மத நிகழ்வு என்று எப்படி அனுமானிக்க முடியும் எனக் கூறி அவரது கோரிக்கையை நிராகரித்தனர்.

The post சென்னை பழைய சட்டக்கல்லூரி அருகே குற்றவியல் நீதிமன்றங்களுக்கான 5 மாடி கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்ட தடையில்லை: இன்று நடக்க இருந்த விழாவை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: